ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது – முன்னாள் ஊழியர்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் செயலிகள், குழந்தைகளை பாதிக்கிறது, பிரிவினையை உண்டாக்குகிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

37 வயதான ஃப்ரான்செஸ் ஹாகென், முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் ப்ராடெக்ட் மேனேஜராக பணியாற்றியவர். கேப்பிட்டல் ஹில் கட்டடத்தில் நாடாளுமன்ற குழு விசாரணைக்காக ஆஜரான அவர்,, ஃபேஸ்புக்கை மிக கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், சமீபத்தைய செய்திகள், ஃபேஸ்புக் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது என எதிர்வினையாற்றியிருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.

அவர் தன் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஃப்ரான்செஸ் கூறும் பல விஷயங்கள் அர்த்தமற்றதாக உள்ளன என்று கூறியுள்ளார். மேலும், ஃபேஸ்புக் தளத்தில் மற்றவர்களை பாதிக்கும் பதிவுகளை எதிர்கொள்ள என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும், வெளிப்படைத்தன்மையை நிறுவுவதற்கும், இது போன்ற முக்கிய பிரச்னைகளை புரிந்து கொள்ளவும் அத்துறையிலேயே முன் மாதிரியான ஆராய்ச்சி திட்டத்தை உருவாக்குவது தொடர்பாகவும் மார்க் சக்கர்பெர்க் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் பாதுகாப்பு, நலன் மற்றும் மன நலன் போன்ற விஷயங்களைக் குறித்து அதிகம் அக்கறை கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ள மார்க், அந்த கடிதத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

“எங்கள் பணிகள் மற்றும் எண்ணத்தை தவறாக பிரதிபலிக்கும் விஷயங்களை ஊடகங்கள் செய்தியாக்குவதைப் பார்க்கும் போது மிகவும் கடினமாக இருக்கிறது” என்றும் கூறினார்.

ஃபேஸ்புக்270 கோடி மாதாந்திர ஆக்டிவ் பயனர்களுடன் உலகின் மிக பிரபலமான சமூக வலைதளமாக இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால் ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமைகளைப் பாதுகாக்கத் தவறுவது தொடங்கி, போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வரை பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

ஃப்ரான்செஸ் ஹாகென், தான் பல ஃபேஸ்புக் தொடர்பான உள் நிறுவன ஆவணங்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு கடந்த சில வாரங்களில் பகிர்ந்ததாக, சிபிஎஸ் தொலைக்காட்சியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

அந்த ஆவணங்களை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் நடத்திய ஆய்வில், அச்செயலியால் பெண்களில் மன நலம் பாதிக்கப்படலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.

“ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை எப்படி பாதுகாப்பானதாக்க முடியும் என்பதை அறிந்திருந்தும் அதை செய்யவில்லை. காரணம் அந்நிறுவனம் மக்களை விட தன் பிரமாண்ட லாபத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது” என தன் சாட்சியத்தில் கூறினார் ஃப்ரான்செஸ் ஹாகென்.

மேலும் மார்க் சக்கர்பெர்க் பல விஷயங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவும் அவரை விமர்சித்தார் ஃப்ரான்செஸ் ஹாகென். மேலும் “இப்போதைக்கு மார்க் சக்கர்பெர்க்கை கூப்பிட்டு கேள்வி கேட்கும் அளவுக்கு அந்நிறுவனத்தில் யாரும் இல்லை என கூறியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பயனர்களைப் பாதித்த ஃபேஸ்புக் சேவைத் தடையை அவர் பாராட்டினார்.

“நேற்று ஃபேஸ்புக் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டதைப் பார்த்தோம்,” என்று அவர் கூறினார். “அது ஏன் தடைபட்டது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, ஃபேஸ்புக் பிளவுபடுத்தலை ஆழப்படுத்தவும், ஜனநாயகத்தை சீர்குலைக்கவும், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் தங்கள் உடலைப் பற்றி மோசமாக உணரவும் பயன்படுத்தப்படவில்லை என்பது எனக்குத் தெரியும்.” என்றார் ஃப்ரான்செஸ் ஹாகென்.

இணையம்அமெரிக்க காங்கிரஸின் மேற்பார்வையில், செனட்டர்களுக்கு அவர் அளித்த பதிலில் “நாம் இப்போது செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

சக்கர்பெர்க், தனது கடிதத்தில், இன்ஸ்டாகிராம் ஆராய்ச்சி தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல இளைஞர்கள் அத்தளத்தைப் பயன்படுத்துவதில் நேர்மறையான அனுபவங்களைக் கொண்டிருந்ததாகவும் கூறினார். “நாங்கள் கட்டமைக்கும் அனைத்தும் பாதுகாப்பானது மற்றும் குழந்தைகளுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியம்” என்று கூறினார் மார்க் சக்கர்பெர்க்.

திங்கட்கிழமை ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேவை செயலிழந்தபோது, “எத்தனை பேர் போட்டி சேவைகளுக்கு மாறினார்கள் அல்லது எவ்வளவு பணத்தை இழந்தோம் என்பது முக்கிய அல்ல, எங்கள் சேவைகளை நம்பியிருக்கும் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வதற்கும், தங்கள் வணிகங்களை நடத்துவதற்கும் அல்லது தங்கள் சமூகத்துக்கு ஆதரவளிப்போருக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது என்பது தான் முக்கியம்” என்றும் கூறினார்.

செவ்வாயன்று குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர்கள் இருவரும் இந்த நிறுவனத்தில் மாற்றம் தேவை என்கிற விவகாரத்தில் ஒன்றுபட்டனர்.

“இன்று ஃபேஸ்புக்கால் ஏற்படுத்தப்பட்ட சுய நலன் மற்றும் சுய மதிப்புக்கான சேதம் ஒரு தலைமுறையையே பாதிக்கும்” என்று ஜனநாயக கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் புளுமென்டல் கூறினார்.

இன்ஸ்டாகிராம்“பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இப்போது பெரிய உண்மையை எதிர்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டான் சல்லிவன், குழந்தைகள் மீது பேஸ்புக்கின் தாக்கம் பற்றிய வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் “நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்? என்பதை உலகம் திரும்பிப் பார்த்து கேட்கும்” என்று கூறியுள்ளார்.

விசாரணைக்குப் பிறகு ஃபேஸ்புக் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஃப்ரான்செஸ் ஹாகென் சாட்சியமளித்த பல பிரச்சினைகளின் குணாதிசயத்துடன்” உடன்படவில்லை என பேஸ்புக் கூறியது. ஆனால் “இணையத்திற்கான நிலையான விதிகளை உருவாக்கத் தொடங்க வேண்டிய நேரம் இது” என்பதை அது ஒப்புக்கொண்டது.

“இணையத்திற்கான விதிகள் புதுப்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன, சட்டமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டிய சமூக முடிவுகளை தொழில்துறையிடம் எதிர்பார்ப்பதற்கு பதிலாக, காங்கிரஸ் செயல்பட வேண்டிய நேரம் இது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

(நன்றி BBC TAMIL)