லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் கடந்த 3-ந்தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மத்திய மந்திரி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால் விசாரணை முறையாக நடைபெற வாய்ப்பில்லை. இதனால் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘‘லக்கிம்பூர் வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில் இதுவரை செய்யப்பட்டுள்ள வழக்குப்பதிவு, கைது செய்யப்பட்டவர்கள் பெயர்கள் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்’’ என்று உத்தர பிரதேச மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

(நன்றி MAALAIMALAR)