லடாக் எல்லை பிரச்சினை: இந்தியா- சீனா இடையிலான பேச்சுவார்த்தை

லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதனால் இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. எனவே படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் பயனாக எல்லையில் உள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்பப்பெற்றன. இதைப்போல கடந்த ஜூலை 31-ந்தேதி நடந்த 12-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை விலக்கிக்கொண்டன.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான 13-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. லடாக் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.கிழக்கு லடாக் பகுதி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 (நன்றி MAALAIMALAR)