தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி: கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3 ஊராட்சி வார்டுகளில் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றிருப்பது, அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. `பல இடங்களில் எங்கள் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர். வேட்புமனுவை வாபஸ் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்னும் வலிமையாக செயல்பட வேண்டும் என்பதையே இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டியது’ என்கின்றனர் ம.நீ.ம நிர்வாகிகள்.

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பெருவாரியான வெற்றியை தி.மு.க கூட்டணி பெற்றுள்ளது. அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. `இது புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி’ என அ.தி.மு.க தலைமை விமர்சித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற முடியவில்லை. இதுகுறித்துப் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். இதனை படுதோல்வி என எப்படிக் கருத முடியும்? ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரே நாளில் ஒரு செடி பூப்பதும் காய்ப்பதும் இல்லை.

இதனை தோல்வி என களத்தில் நிற்கும் நாங்களே நினைக்கவில்லை. கோடிகளைக் கொட்டாமல் கொள்கைகளைப் பேசி இந்தக் கட்சிகள் களத்தில் நிற்குமா? தி.மு.க தனித்துப் போட்டியிடுமா? இன்றைக்கு மக்கள் எங்களுக்கு ஆதரவு தராவிட்டால், நாளை தருவார்கள். நாளை மறுநாள் தருவார்கள். 5 வருடங்கள் கழித்து இதே கேள்வியை என்னிடம் கேளுங்கள்” என்றார்.

சீமான்விசையுடன் தொடருமா .நீ. அரசியல்?

இந்த வரிசையில், மக்கள் நீதி மய்யமும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ஒன்பது மாவட்டங்களில் மூன்று ஊராட்சி மன்ற வார்டுகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், ` உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த ம.நீ.ம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ம.நீ.மவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

”இப்படியொரு தோல்வி வரும் என கமல் எதிர்பார்த்தாரா?” என மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரும் திரைப்பட இயக்குநருமான முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

“நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது நகர்ப்புறங்களில் அதிக வாக்குகளை பெற்றிருந்தோம். கிராமப்புறங்களில் நாங்கள் வலுவாக இல்லை. அங்கு எங்கள் பணிகளை தற்போதுதான் தொடங்கியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் என்ன முடிவுகள் வரும் என்பது முன்னரே தெரியும். எங்களுக்கான குறுகிய காலத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் இல்லை. பேரூராட்சி, நகராட்சிகளில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். பணம், அதிகாரம் உள்ள இடத்தில் நேர்மையான தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. எங்கள் கட்சியை கிராமங்களில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவே தேர்தல் களத்தில் இறங்கினோம்” என்கிறார்.

வேட்பாளர்கள் மிரட்டப்பட்டனர்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அக்டோபர் 12ஆம் தேதி வெளியாகத் தொடங்கினதொடர்ந்து பேசிய முரளி அப்பாஸ், “தேர்தல் களத்தில் கீழ்மட்ட அளவில் தி.மு.க வலிமையாக உள்ளது. அந்தக் கட்சியின் சார்பாக போட்டியிடக் கூடியவர்களும் வலிமையானவர்களாக உள்ளனர். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பல இடங்களில் மிரட்டப்பட்டனர். வேட்பாளர்களின் உறவினர்கள் மூலமாக மிரட்டுவது என அதிகாரத்தை வைத்துக் கொண்டு சிலர் செயல்பட்டனர். சில இடங்களில் வேட்புமனுவை வாபஸ் பெறக் கூடிய நிலைக்கும் எங்கள் வேட்பாளர்கள் தள்ளப்பட்டனர். இன்னும் வலிமையாக செயல்பட வேண்டும் என்பதையே இந்தத் தேர்தல் காட்டியுள்ளது” என்கிறார்.

மேலும், “கடந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம், சட்டசபைத் தேர்தலுக்குத் தயார் ஆனதுதான். இந்தமுறை நிற்பதற்குக் காரணம், கிராமங்களில் ம.நீ.ம வலுவாக இல்லாததுதான். இதனையொட்டி, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கமல் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்றைய தேதியில் இருந்து 70 நாள்களுக்குள் அனைத்து ஊர்களிலும் கிளைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு செய்யாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் ஒதுங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார். ‘உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறோம்’ என்பதைக் காட்டுவதற்காகத்தான் நின்றோம். வரும் நாள்களில் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதுவும் எங்களுக்குத் தெரியும். அதனால் இந்தத் தேர்தல் எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை” என்கிறார்.

பலவீனமடைந்தது எங்கே?

”சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ம.நீ.மவை விட்டு முக்கிய நபர்கள் விலகிச் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாமா??” என்றோம். ”நிச்சயமாக இல்லை. எங்கள் கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கும் தற்போது தேர்தல் நடந்த ஒன்பது மாவட்டங்களுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 17 லட்சம் வாக்குகளை வாங்கினோம். அடுத்தகட்டமாக, அதனை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பலவீனமாக இருந்துவிட்டோம்.

மக்களும், ‘தேர்தலில் ஓட்டுப் போட்டால் நமக்கு என்ன கிடைக்கும்’ என்றுதான் பார்க்கிறார்கள். இல்லாவிட்டால், `எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் நமக்கு நல்லது நடக்கும்’ என நினைக்கிறார்கள். தேர்தலில் பணம் கொடுத்தால்தான் வேலை பார்ப்போம் எனப் பேசும் நிலையில்தான் பிரதான கட்சிகளின் தொண்டர்களும் உள்ளனர். பணம் செல்லும் வேகத்தைப் பார்த்தால், இதில் இருந்து மீட்டெடுப்பது மிகவும் சிரமமான பணியாக உள்ளது” என்கிறார்.

.நீ.மவின் எதிர்காலம் என்ன?

100க்கும் மேற்பட்ட உள்ளாட்சி இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வென்றதாக நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.”உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் மூலம், மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?” என மூத்த பத்திரிகையாளர் மணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ கமலுக்கு அரசியலில் இனி இறங்குமுகம்தான் என்பது என்னுடைய கருத்து. ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்துவிட்டு நகர முடியாது. அடுத்ததாக, நடிகர்களின் அதிகபட்ச அரசியல் கணக்குகள் என்பது 6 முதல் 8 சதவிகித வாக்குகள்தான். அதற்கு மேல் அவர்களால் செல்ல முடியாது. இதுதான் விஜயகாந்துக்கு நடந்தது, நாளை சீமானுக்கும் கமலுக்கும் இதுதான் நடக்கும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” என்கிறார்.

”அரசியலில் கமல் வெற்றி பெற முடியாது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. இந்தத் தோல்வி எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இனி அவர் எத்தனை தேர்தலில் நின்றாலும் தோல்வியடைவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்த்துவிட்டு நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அவர்கள் எல்லாம் ஓர் இயக்கத்தின் குழந்தைகளாக இருந்து வளர்த்தெடுக்கப்பட்டனர். இவர்கள் எல்லாம் தனி நபர்கள்.

சினிமா கவர்ச்சி என்பது அதிகபட்சமாக பத்து சதவிகித வாக்குகளைக் கொடுக்கும். அதனைத் தக்கவைப்பதே பெரும் சிரமமாக இருக்கும். ஆட்சியைப் பிடிப்பதற்கு 30 சதவிகித வாக்குகளைத் தாண்ட வேண்டும். நடிகர்கள் நாடாள்வது என்பது இனி நடக்கப் போவதில்லை. இங்கு பகுதி நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. இதைப் பற்றியெல்லாம் நம்மைவிட கமலுக்கு நன்றாகவே தெரியும்” என்கிறார் மணி.

(நன்றி BBC TAMIL)