திகேஎம் பதவி போராட்டம் : குற்றச்சாட்டுகளை இராமசாமி மறுப்பு

குழு குழுவாகப் பிரிந்து செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை, குறிப்பாக பினாங்கில் உள்ள இந்தியத் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி நிராகரித்தார்.

அடுத்த பொதுத் தேர்தலில், இராமசாமி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, காலியாக விடப்படக் கூடிய துணை முதல்வர் (திகேஎம்) II பதவிக்குப் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறை சட்டமன்ற உறுப்பினரான இராமசாமி, தனக்குச் சில விருப்பங்கள் இருக்கலாம், ஆனால் இறுதியில் கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.

“நான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதா அல்லது தற்போதைய மாநிலத் தொகுதியில் தொடர்வதா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

“வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ) முன்னதாகக் கட்சி அதைத் தீர்மானிக்கும்.

“எனக்கு சில ஆசைகள் இருக்கலாம், ஆனால் எனது சொந்த முடிவுகளை விட கட்சியின் கருத்துக்கள் முக்கியம்,” என்று ஓர் அறிக்கையில் கூறினார்.

ஃப்ரீ மலேசியா டுடே (எஃப்எம்டி) செய்தியின்படி, இராமசாமி மாநில அரசியலை விட்டு கூட்டாட்சி நிலைக்குச் சென்றால், அவரின் நண்பர்களாகக் கருதப்படும் தலைவர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இராமசாமி குழுவை வீழ்த்த விரும்பும் ஓர் இயக்கத்தைச் சேர்ந்த “புதியவர்கள்” இருப்பதாக அந்த அறிக்கை கூறியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இராமசாமி மறுத்தார்.

“துணை முதலமைச்சர் பதவியை ஒருவர் குறிவைப்பது ஒருபுறம் இருக்க, இந்தப் புதியவர் ஒருவர் இருக்கிறார் எனும் குற்றச்சாட்டுகளில் எனக்குச் சந்தேகம் உள்ளது.

“இந்தப் புதியவர் மற்றும் அவர் எப்படி கட்சியில் மிகவும் சக்திவாய்ந்தவர் என்பதைப் பற்றிய கூடுதல் தகவலை எஃப்எம்டி எனக்குத் தர வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அந்த அறிக்கையில், மாநகர கவுன்சிலர் பி டேவிட் மார்ஷல் மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டி ஆகியோர் கட்சியில் இராமசாமியின் நண்பர்கள் எனப் பெயரிடப்பட்டனர், மேலும் அவர்களை எதிர்க்கும் பெயரிடப்படாத “இலட்சியவாதப் புதியவர்கள்” என்று இன்னொரு குழுவைச் சுட்டிகாட்டியுள்ளனர்.

“என்னைப் பொறுத்தவரை, பொதுவாக டிஏபி மற்றும் குறிப்பாக இந்தியர்களிடையே குழுவாரியான செயற்பாடு நடைமுறையில் இல்லை.

“சில விஷயங்களில் என்னை எதிர்க்கும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் இருக்கலாம், ஆனால், மற்ற விஷயங்களில் அவர்கள் எனக்கு ஆதரவளிக்கலாம்,” என்று இராமசாமி கூறினார்.

சிறந்த செயல்திறன் கொண்ட அரசியல்வாதிகள் கூட, விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளில் இருந்து விடுபடுவதில்லை என்றும் அவர் கூறினார்.

“எதிர்ப்பே இல்லை என்று எந்தக் காலத்திலும் கூற முடியாது, நானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன், விமர்சித்துள்ளேன். இது வளரும் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும்,” என்று அவர் கூறினார்.

2011-ஆம் ஆண்டில், பினாங்கு டிஏபியில் சில குழுக்களுக்கிடையிலான மோதல்கள் காரணமாக பதட்டங்கள் இருந்தன, இருப்பினும் அது இறுதியில் தீர்க்கப்பட்டது.

அந்தச் சமயத்தில், அப்போதைய டிஏபி துணைத் தலைவர் கர்பால் சிங்குடன் இராமசாமிக்குச் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதங்கள் பதட்ட நிலையை ஏற்படுத்தியது.