படிவம் 5 மாணவர்கள் சுழற்சி முறையில் இல்லாமல் பள்ளி செல்லும் வாய்ப்பு

படிவம் ஐந்து மாணவர்கள் சுழற்சி முறையில் இல்லாமல் பள்ளி செல்வதற்கு ஏற்ற வகையிலான தடுப்பூசி விகிதங்கள் குறித்து கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் விவாதித்து வருகிறது.

அதன் அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின், படிவம் ஐந்து மாணவர்களில் 97 விழுக்காட்டினர் (371,696 மாணவர்கள்) முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 57.9 விழுக்காட்டினருக்கு (142,655 மாணவர்கள்) முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

“மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர், எஸ்.ஓ.பி.க்கள் நன்கு செயல்படுத்தப்படுகின்றன, எனவே சில மாணவர் குழுக்களுக்குச் சுழற்சி முறை தேவையில்லை என்று கருதப்படுகிறது.

“மலேசிய உயர்க்கல்வி சான்றிதழ் (எஸ்.தி.பி.எம்.) தேர்வு மாணவர்களைப் போன்று, படிவம் ஐந்து மாணவர்களுக்கும் இது தொடங்கப்படலாம்,” என்று அவர் இன்று காலை செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், தேசிய மீட்பு திட்டத்தின் (பிபிஎன்) நான்காவது கட்டத்தை அடைந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சேர, 339,951 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக ராட்ஸி கூறினார்.

பிபிஎன்-இன் நான்காம் கட்டத்தை அடைந்த மாநிலங்களில், தொடக்கப் பள்ளிகளில் முதல் நிலை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க கல்வி அமைச்சு முன்பு அனுமதித்தது.

இதற்கிடையில், பள்ளி மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் (பிடிபி) சுழற்சியைச் செயல்படுத்துவது, வீட்டிலேயே கற்பித்தல் மற்றும் கற்றல் (பிடிபிஆர்) உட்பட சொந்தமாகவோ அல்லது நேருக்கு நேர் பள்ளிக்குச் செல்லும் நடவடிக்கையோ அனைத்தும் இதுவரை சுமூகமாகச் சென்றதாக ராட்ஸி கூறினார்.

  • பெர்னாமா