கட்சி தாவல் : அரசாங்கம் சர்வதேச சட்ட மாதிரியை ஆய்வு செய்கிறது – வான் ஜுனைடி

மக்களவை | கட்சி தாவல்கள் தொடர்பான சட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக, பல மாநிலங்களில் நடந்த நீதிமன்ற வழக்குகள் உட்பட மாநில அளவில் பயன்படுத்தப்படும் சட்டங்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது.

பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், அது தவிர, இந்தியா, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளின் கட்சி தாவல் சட்ட மாதிரிகளையும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றார்.

“மக்களவையில் இன்று நடந்த கேள்வி பதில் அங்கத்தில், “இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் இருதரப்பு அமர்வு மூலம் விவாதிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

கட்சி தாவல் சட்டத்தை உருவாக்க அரசாங்கத்தின் தயார்நிலை அளவை அறிய விரும்பிய செனட்டர் என்.பாலசுப்ரமணியத்தின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

வான் ஜுனைடி கூறுகையில், கட்சி செயல்பாட்டுக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது, தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த மக்களின் உரிமைகளை இது பாதுகாக்கும் என்றார்.

இந்த விஷயத்தில், வெளிநாட்டு சட்ட வல்லுனர்களுடன் அரசாங்கத்தால் செய்யப்படும் உடன்படிக்கை வடிவம் குறித்து, செனட்டர் ஏ.கேசவதாஸ் விடுத்த கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த வான் ஜுனைடி, இதுவரை வெளிநாட்டு சட்ட நிபுணர்களுடன் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார்.

“எனது அமைச்சுக்கும் சட்டத்துறை தலைவருக்கும், மற்றும் நாடு முழுவதும் உள்ள நமது வழக்கறிஞர்களுக்குப் போதுமான நிபுணத்துவம் உள்ளது என்று நான் நம்புகிறேன், எனவே வெளிநாட்டு சட்ட நிபுணர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

“இருப்பினும், நான் முன்பு குறிப்பிட்ட நாடுகளின் சட்ட மாதிரியை நாங்கள் பயன்படுத்துகிறோம், அதன் பலவீனங்களையும் பலங்களையும் பார்க்க முடியும். அதே போல், நமது சொந்த அரசியலமைப்பின் கண்ணோட்டத்தில் மற்றும் நாம் அறிமுகப்படுத்த வேண்டிய சட்டத்தின் வகை குறித்து நமது மக்களின் விருப்பத்தையும் மதிப்பீடு செய்யலாம்,” என்றார் அவர்.