தடை செய்யப்பட்ட புலம் பெயர்ந்த தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை – இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு,

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் ஒரு நல்லிணக்க சூழல் உருவாகவில்லை. சிங்கள மக்களுடன் சம அளவில் சமூக நீதியும், சம மதிப்பும் பெற்று வாழ்கிற சூழல் அங்குள்ள தமிழர்களுக்கு இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்சை சந்தித்து பேசினார். அவரிடம் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகள், உள்நாட்டு வழியிலேயே தீர்க்கப்படும், இந்த வகையில் புலம் பெயர்ந்த தமிழ் குழுக்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

ஆனால் தற்போது சிங்கள அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கிறது. தனது முந்தைய வாக்குறுதியில் இருந்து பல்டி அடித்துள்ளது.

இதுபற்றி இலங்கை அரசின் வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ், பத்திரிகை ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

உலகளாவிய தமிழ் மன்றம் (குளோபல் தமிழ் போரம்) போன்ற தடை செய்யப்பட்ட புலம் பெயர்ந்த தமிழ் குழுக்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.

(இலங்கையில், உலகளாவிய தமிழ் மன்றம், பிரிட்டிஷ் தமிழ் மன்றம், கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனடா தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளைஞர் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட தமிழ் புலம் பெயர் குழுக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.)

இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சு நடத்த முடியாது. இது எங்கள் நாட்டின் சட்டத்தை மீறிய செயல் ஆகும். எனவே அதற்கு சாத்தியம் இல்லை. ஆனால் வேறு கருத்துகள் உள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருப்பது பயனுள்ளது.

நல்லிணக்க செயல்முறையின் அங்கமாக பல்வேறு குழுக்களுடனும், தனி நபர்களுடனும் அரசு விவாதித்துக்கொண்டிருக்கிறது. கருத்துக்களைப் பெறுவது எப்போதும் நல்லது. இப்போது பல தரப்பட்ட மக்களுடனும் விரிவான விவாதம் நடத்துகிறோம். நாங்கள் தொடங்கியுள்ள நல்லிணக்க செயல்முறைகளை அது செழுமையாக்கி உள்ளதாக நான் நினைக்கிறேன்.

கிளாஸ்கோவில் பருவநிலை மாற்ற மாநாடு முடிந்து, நாடு திரும்பியதும் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பார்.

எனவே தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அல்லது புலம் பெயர்ந்த குழுவினர் அல்லது நாடாளுமன்ற எதிர்க்கட்சியாகவோ இருக்கட்டும். அவர்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அதுவே முன்னோக்கி செல்லும் வழி ஆகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

(நன்றி DAILY THANTHI)