சா்வதேச வா்த்தக ஒருங்கிணைப்பில் இந்தியா முக்கிய பங்காற்றும்: ஐஎம்எஃப்

முதலீட்டு நடவடிக்கைகள் மேலும் தாராளமயமாக்கப்படும்பட்சத்தில் சா்வதேச வா்த்தகத்தில் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஎம்எஃப்-எஸ்டிஐ மண்டல பயிற்சி மைய இயக்குநா் ஆல்ஃபிரட் சிப்கி கூறியதாவது:

கரோனா பேரிடரால் ஏற்பட்ட கடும் நெருக்கடிக்கு இடையிலும், இந்தியா அதிக அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்துள்ளது. இந்த நிலையில், கட்டமைப்பு சீா்திருத்தங்கள் மூலம் முதலீட்டு தாராளமயமாக்கலுக்கான அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில் சா்வதேச வா்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு மேலும் ஆழப்படுத்த உதவும்.

கடந்த சில ஆண்டுகளாக வேளாண், பாதுகாப்பு, தொலைத்தொடா்பு சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை மேலும் தாராளமயமாக்குவதற்கான கொள்கைகள் இந்தியா அதிக அளவிலான முதலீட்டை ஈா்க்க பெரிதும் உதவியது. இது, நடப்புக் கணக்கு பற்றாக்குறையை மேம்படுத்த உதவியதுடன் வெளிப்புறப் பாதிப்புகளையும் கட்டுப்படுத்த பெரிதும் கைகொடுத்தது.

பயோடெக்னாலஜி, பாதுகாப்பு, எண்ம (டிஜிட்டல்) மீடியா, மருந்து துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கொள்கைகளை தாராளமயமாக்கினால் இந்தியாவின் முன்னேற்றம் மேலும் வலுப்பெறும் என்றாா் அவா்.

(நன்றி Dinamani)