பாதுகாவலர் ஊதியப் பிரச்சினையில் தலையிட கல்வியமைச்சுக்கு வலியுறுத்து

பெர்லிஸில் உள்ள 10 பள்ளிகளில், பாதுகாவலர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதப் பிரச்சனையில் கல்வி அமைச்சு தலையிட வேண்டுமென அரசு ஒப்பந்த தொழிலாளர் வலைபின்னல் (ஜேபிகேகே) கேட்டுக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு சேவை ஒப்பந்தம் வழங்கப்பட்ட தனியார் நிறுவனம், 38 பாதுகாவலர்களுக்கு இரண்டு மாதங்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஜேபிகேகே கூறுகையில், அந்நிறுவனம் தங்கள் பாதுகாவலர்களுக்குச் சம்பளம் வழங்காததற்கு எந்தக் காரணமும் இல்லை, ஏனெனில் பணம் நேரடியாக அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது என்றது.

“எனவே, கல்வி அமைச்சிலிருந்து தாமதமாக பணம் செலுத்தப்பட்டால் ஒழிய, நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது.

“ஊழியர்களின் சம்பளத்தை நிறுவனம் தாமதிப்பது, அந்நிறுவனம் நம்பிக்கை மீறலை செய்துள்ளதற்கு அர்த்தமாகும்,” என்று அவர் கூறினார்.

ஜூலையிலிருந்து சம்பளம் தாமதமானது

கடந்த ஜூலை மாதம் முதல், சம்மந்தப்பட்ட பாதுகாவலர்களுக்கு முதலாளிகள் சம்பளம் வழங்குவது தாமதமாகி வருவதாக ஜேபிகேகே கூறியது.

“ஜூலை 2021-க்கான சம்பளத்தைச் செப்டம்பர் 24, 2021 அன்றுதான் அவர்கள் பெற்றனர். அதே நேரத்தில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2021-க்கான சம்பளம் இன்றுவரை பெறப்படவில்லை.

“சம்பளத் தேதி மீண்டும் தாமதமாகலாம்.. அக்டோபர் 2021 மற்றும் வரும் மாதங்களுக்கான சம்பளத்திற்கும் அதே பிரச்சனை ஏற்படலாம் என்று இந்தப் பாதுகாவலர்கள் கவலைப்படுகிறார்கள்,” என்று அது கூறியது.

துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காகத் தனியார் நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கம் முன்பு நியமித்தது.

இருப்பினும், இந்த நடைமுறையால், சில தனியார் நிறுவனங்கள் ஊழியர்களைச் சுரண்டுகின்றன என்ற புகார்கள் எழும்பியுள்ளன.

மலேசிய சோசலிசக் கட்சி இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண ஜேபிகேகே-ஐ அமைத்தது.