மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்; மருத்துவர்கள் சாதனை

நியூயார்க்: முதல்முறையாக மனிதருக்கு மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.

மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இருக்கும் நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பாக தொடர்ந்து சோதனை முயற்சிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக மனித உடலுக்கு மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உறவினர்கள் அனுமதியுடன் அப்பெண்ணுக்கு பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடலில் புதிதாக பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எவ்வித எதிர்ப்பையும் ஆற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். விலங்குகளின் உறுப்புகள் மனிதர்களுக்கு பொருத்தும் இந்த சோதனை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதால், மனித உறுப்புகளின் பற்றாக்குறையை போக்குவதற்கு உதவும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.

dinamalar