எம்ஏ63 தொடர்பான மசோதா ஒத்திவைப்பு – வாரிசான் ஏமாற்றம்

1963 மலேசிய ஒப்பந்தம் (எம்ஏ63) தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவைத் தாக்கல் செய்வதை, அரசாங்கம் ஒத்திவைக்க முடிவு செய்ததில் தனது கட்சி ஏமாற்றமடைந்ததாக வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டல் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்ற ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறியதைக் கண்ட சபா மற்றும் சரவாக் மக்களுக்கு இந்த ஒத்திவைப்பு தொடர்ச்சியான ஏமாற்றம் என்று அவர் கூறினார்.

“(…) இவ்விவகாரம் கவனமாக ஆராயப்பட்டது, மலேசியாவின் கடந்த நான்கு பிரதமர்களின் போது இது விவாதிக்கப்பட்டாலும், அது இன்னும் தீர்க்கப்படவில்லை,” என்று ஷாஃபி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபரின் அர்ப்பணிப்பு மற்றும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்குக் கட்சி பாராட்டு தெரிவிப்பதாக வாரிசான் தலைவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்வதற்கு எல்லாம் சுமூகமாக நடக்க அமைச்சர் கடுமையாக உழைத்தார் என்று ஷாஃபி கூறினார்.

எவ்வாறாயினும், சட்டத்துறைத் தலைவர் இட்ரூஸ் ஹரூனிடம் மேலும் விளக்கத்தைப் பெற அமைச்சரவை முடிவு செய்தபோது, அந்த முயற்சி இறுதியில் ‘ஸ்தம்பித்தது’.

“எம்ஏ63-ஐ ஆதரிப்பது முக்கியம், ஏனென்றால் அது மக்கள் மற்றும் நாட்டின் நலன் சார்ந்தது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, வான் ஜுனைடி எம்ஏ63 தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா அக்டோபர் 26-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

சட்டத்துறைத் தலைவர் சில பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் வரை மசோதா ஒத்திவைக்கப்படும் என்று அமைச்சர் நேற்று கூறினார்.

மசோதா சபா மற்றும் சரவாக் அரசாங்கங்களுக்கு அதிக சுயாட்சியை வழங்கும் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 2, பிரிவு 1-ஐ திருத்துவதற்கு முயல்கிறது.

இது தொடர்பான வளர்ச்சியில், சபா மற்றும் சரவாக் மக்களின் உரிமைகளை வலுப்படுத்த அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட்டணி ஆதரிக்கும் என்று பிஎச் தலைமை மன்றம் கூறியது.

“சபா மற்றும் சரவாக் ஆகியவற்றுக்கான நீதியை நிலைநாட்டும் பொருட்டு எம்ஏ63-இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தத் திருத்தம் தீவிரப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.