ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா மீண்டும் தேர்வு

டோக்கியோ : ஜப்பானில் பார்லிமென்ட் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து நாட்டின் பிரதமராக புமியோ கிஷிடா நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

கிழக்காசிய நாடான ஜப்பானில் கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிஹைட் சுகா பதவி விலகுவதாக கடந்த செப்டம்பரில் அறிவித்தார்.ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பதவி வகிப்பார். அதன்படி பிரதமர் சுகா பதவி விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

பின் கட்சித் தலைவராக நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நாட்டின் பிரதமராக பதவியேற்ற புமியோ கிஷிடா பார்லிமென்ட்டை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த மாதம் 31ம் தேதி 465 இடங்களை உள்ளடக்கிய பார்லி.க்கு பொதுத் தேர்தல் நடந்தது.

பெரும்பான்மைக்கு 233 இடங்கள் தேவை என இருந்த நிலையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி 261 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான கோமிட்டோ 32 இடங்களில் வென்றது.தலைமை மாற்றத்திற்கு மக்கள் ஆதரவு இருப்பதை அந்த தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தின.

இந்நிலையில் நாட்டின் பிரதமராக புமியோ கிஷிடா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்லி.யில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில் ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் அவரின் பெயரை ஒருமனதாக தேர்வு செய்தனர். பின் தன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்து பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்தார். அதன்படி வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் கல்வி அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி நியமிக்கப்பட்டார்.

dinamalar