அமைச்சர் தகுதிக்கு நிகரான தூதர் நியமனம் – விக்னேசுவரனுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்து

தெற்கு ஆசியா சிறப்பு தூதராக நியமனம் பெற்ற மஇகாவின் தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சீறி ச. விக்னேசுவரன் அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்துகளைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

இந்தியா, இலங்கை, பாகிசுதான், வங்காளதேசம், நேபாளம் போன்ற சில நாடுகளை உள்ளடக்கிய இத்தூதர் பதவி, ஏற்கனவே முந்தைய பிரதமர் துன் மகாதீரால் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும், இப்பதவி தற்போதையப் பிரதமர் இசுமாயில் சபரி யாக்கோப் தலைமையிலான அரசால் அமைச்சர் தகுதியுடன் வழங்கப்பட்டிருப்பது நம் இனத்திற்குக் கூடுதல் சிறப்பு என்றார் அவர்.

இதன்வழி தமிழர் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளைத் தெற்காசிய நாடுகளில் தான்சீறி அவர்கள் ஈட்டித் தரலாம் என நம்பிக்கை பிறந்திருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

மேலும், இந்திய விடுதலைக்காக மலேசியத் தமிழர்களின் அளப்பரிய பங்களிப்பை முன்னிறுத்தி, மலேசியத் தமிழர்களுக்கு இந்தியாவுக்கான விசா விலக்கு அளிக்க கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி விரைவில் தான்சீறி அவர்களுடன் நேரடி சந்திப்பில் மனு ஒன்றை வழங்க உள்ளதாகவும் பாலமுருகன் தெரிவித்தார்.