நாட்டை அவமானப்படுத்தும் அரைகுறை அரசியல்வாதிகள்!

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய சில அரசியல்வாதிகளின் தரக்குறைவான அறிக்கைகளும் செயல்பாடுகளும் நமக்கு ஏற்படுத்தும் கோபத்தைவிடக் கோமாளித்தனமே அதிகமாக உள்ளது.

வெந்நீர் அருந்தினால் கோவிட் குணமடையும் என்னும் அறிவிப்பு தொடங்கி ‘தீமா’ மதுபானச் சர்ச்சை வரையில் ஹாஸ்யத்திற்கு அளவில்லை என்றே சொல்ல வேண்டும்.

உலக வரலாற்றில் மிகப் பெரிய திருட்டுச் சம்பவம் என்று வருணிக்கப்பட்ட 1.எம்.டி.பி. விவகாரத்தின் வழி அனைத்துலக ரீதியில் புகழ் பெற்ற மலேசியா தற்போது மேலும் பல அறிவிலித்தனமான செயல்களினால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அகில உலகையே புரட்டிப்போட்ட கோறனி நச்சிலைக் கொல்வதற்கு வெந்நீர் அருந்தினாலே போதும் என்று கடந்த ஆண்டில் ஒரு அறிவிப்பைச் செய்த நமது முன்னாள் சுகாதார அமைச்சர் அடாம் பாபா அனைத்துலக ஊடகங்களின் நகையாடல்களுக்கு ஆளானதை நாம் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில் உள்நாட்டு தயாரிப்பான ‘தீமா’ என்னும் ஒரு மதுபானம் ஏற்படுத்திய சர்ச்சை நமது அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு அறிவுத் திறன் படைத்வர்கள் என்பதை உலக மக்களுக்கு அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டது.

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் இடம் பெறப் புறவழியாகக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பைத் தனது தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது பாஸ் கட்சி. ஆனால் அவர்களுடைய அறிக்கைகளும் செயல்பாடுகளும் பெரும்பாலான சமயங்களில் உள்நாட்டினர் மட்டுமின்றி அனைத்துலக ரீதியிலும் மக்கள் எள்ளி நகையாடும் அளவுக்குக் கோமாளித்தனமாவே உள்ளது.

‘தீமா’ என்பது மலாய்க்காரப் பெண்ணின் பெயர் போல உள்ளதால் அந்த மதுபானத்திற்குப் பெயர் மாற்றம் செய்ய லேண்டும் எனச் சமய விவகாரங்களுகான அமைச்சர் இட்ரிஸ் அஹ்மட் வலியுறுத்தினார்.

‘தீமா’ எனும் சொல் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு காலக்கட்டத்தில் முதுகெலும்பாக விளங்கிய ‘ஈயம்’ என அந்த மதுபானத் தயாரிப்பாளர்கள் விளக்கமளிக்க முற்பட்ட போதிலும் பாஸ் கட்சியினரின் சிந்தனையில் வெளிச்சம் விழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த மதுபான ஆலையை இழுத்து மூட வேண்டும் என அக்கட்சியின் இளைஞர் பிரிவினர் உக்கிரமாகத் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மிகவும் மோசமாக நலிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் ஒரு புறம் தூக்கி வைத்துவிட்டு ‘தீமா’ தொடர்பாக அதன் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றது மற்றொரு வேடிக்கை.

பல்லூடக மற்றும் தொடர்புத்துறை அமைச்சர், உள்நாட்டு தொழில் துறை மற்றும் பயனீட்டாளர் துறை அமைச்சர், ஒற்றுமைத்துறை அமைச்சர் ஆகியோரோடு இட்ரிஸும் சேர்ந்து தங்களுடைய பொன்னான நேரத்தை ‘தீமா’ விவகாரங்களுக்குச் செலவழித்ததால் பொது மக்களின் கண்டனங்களுக்குக் கேட்கவா வேண்டும்!

பக்காத்தானிடமிருந்து வலுக்கட்டாயமாக ஆட்சியைப் பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அரக்கப் பறக்க ஒன்று சேர்க்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலருடைய தரம் சந்தி சிரிப்பதைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் பொது மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்குப் போட்டிக் கொடுக்கும் வகையில் சில எதிர்க்கட்சியினரும் நடந்து கொள்வதுதான் வியப்பாகவும் வெறுப்பாகவும் உள்ளது.

‘தீமா’வை அருந்துவது மலாக்காரப் பெண்ணைக் குடிப்பது போலாகும் எனப் பொது மக்கள் வாய்விட்டுச் சிரிக்கும் அளவுக்குக் கூத்தடித்தார் பி.கே.ஆர். கட்சியின் தாங்காப் பத்துத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ருஸ்னா அலுவாய்.

ஒரு பெண்ணை எப்படிக் குடிப்பது? கொஞ்சமும் சிந்தனைக்கு எட்டாத கருத்தாக அல்லவா இருக்கிறது! எப்படி இவர்களுக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது என்றே தெரியவில்லை.

இப்படி அறிவிலித்தனமாகப் பேசியதற்குப் பிறகு அவர் மன்னிப்பு கோரிய போதிலும் அவருடைய கூற்று மக்களின் மனங்களில் நீண்ட நாள்களுக்கு நீங்காதிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த வரிசையில் சேர்ந்துகொண்ட மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினர் பக்காத்தான் ஆட்சியில் சமய விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்த அமானா கட்சியைச் சேர்ந்த முஜாஹிட் யூசோஃப்.

மதுபானத் தயாரிப்பு, விற்பனை, போக்குவரத்து மற்றும் அவற்றை விளம்பரப்படுத்துதல், முதலிய வேலைகளைச் செய்வதிலிருந்து முஸ்லிம்களைத் தடை செய்ய வேண்டும் என்ற ஒரு அதிரடி அறிவிப்பைச் செய்து அதிர்ச்சி ஏற்படுத்தினார் அவர்.

அவ்வாறு செய்தால் எத்தனை இலட்சம் மலாய்க்காரர்கள் வேலையிழப்பார்கள் என்று கொஞ்சமாவது அவர் சிந்தித்தாரா என்று தெரியவில்லை.

மதுபானப் புட்டிகளையோ பெட்டிகளையோ மலாய்க்காரர்கள் தொடவே கூடாது எனும் அவருடைய கருத்து அமலுக்கு வந்தால் சட்ட விரோத அடிப்படையில் பறிமுதல் செய்யப்படும் அத்தகைய பொருள்களை   யார்தான் தீண்டுவது!

ஏனெனில் காலங்காலமாக அம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுங்கத்துறை மற்றும் காவல் துறையில் மலாய்க்காரர்கள்தானே அதிகமாக உள்ளனர்!

இத்தகைய விளைவுகளையெல்லாம் முஜாஹிட் கடுகளவாவது சிந்தித்தாரா என்று தெரியாது.

‘நானும் பேசினேன்’ எனும் பந்தாவுக்காக வெறுமனே உளறித்தள்ளித் தெரிந்தோ தெரியாமலோ தங்களுடைய தரக்குறைவான வளர்ச்சியை நிறைய அரசியல்வாதிகள் சயமாகவே விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஆக இப்படிப்பட்ட அரசியல்வாதிகள்தான் தற்போது நம் நாட்டை நிர்வாகம் செய்கிறார்கள் எனும் அவலம் ஒரு புறமிருக்க அவர்கள் தானாகவே இந்த உயர் பதவிகளுக்கு வரவில்லை எனும் கூற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தேர்தலின் போது சற்றும் சிந்திக்காமல் கண்மூடித்தனமாக இவர்களுக்கெல்லாம் வாக்களித்தது பொது மக்கள்தானே!

அடுத்த பொதுத் தேர்தலிலாவது இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைக் களையெடுப்பது பொது மக்களின் கடமையாகும்.