கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அபராதம்; ஆஸ்திரியா அரசு அதிரடி நடவடிக்கை

வியன்னா : கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு, ‘லாக்டவுன்’ எனப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பகுதியாக செயல்படுத்த, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு சென்றால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளில் 20 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. ஆஸ்திரியாவில், 65 சதவீத மக்களுக்கே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இது மிகவும் குறைவு. கடந்த 13ம் தேதி மட்டும் 13,152 பேருக்கு தொற்று உறுதியானது. மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இங்கு வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.அதனால் தடுப்பூசி போடாதவர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை ஆஸ்திரியா அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி போடாதவர்கள், வீட்டில் இருந்து அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைக்கு மட்டும் செல்ல அனுமதி உள்ளது.

வர்த்தக நிறுவனம்அதே நேரத்தில் மற்ற இடங்களுக்கு சென்றால், அதற்கேற்ப அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அனைவரும் தடுப்பூசி சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்கள், தியேட்டர் உள்ளிட்டோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

dinamalar