மலாக்காவில் தோல்வி: பக்காத்தானுக்கு பாடம்!

இராகவன் கருப்பையா – நடந்து முடிந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் தேவையில்லாத மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிய அறிவிலித்தனமான ஒரு அநாவசிய செயல் என்றால் அது மிகையில்லை.

இந்த திடீர் தேர்தல்  நடத்தப்படவேண்டுமென மாநில வாக்காளர்கள் ஒற்றைக்காலில் நின்றார்களா? ஒரு போதும் இல்லை. குறிப்பிட்ட சில சுயநல அரசியல்வாதிகளின் அக்கப்போரினால் ஏற்பட்ட விளைவுதான் அது.

ஆனால் சட்டமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட அந்த நால்வரும் தற்போது வேலையிழந்துள்ளது மட்டுமின்றி ஏற்கெனவே கையிலிருந்த தொகுதிகளையும்  இழந்து பக்காத்தான் அதிர்ச்சித் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சித் தாவும் அரசியல் தவளைகளுக்கெதிராக ஒட்டு மொத்த நாட்டு மக்களும் போர்க் கொடியேற்றியிருக்கும் இவ்வேளையில் அந்நால்வரையும் அரவணைக்கத் துடித்ததுதான் அன்வார் செய்த மாபெரும் தவறாக அமைந்துவிட்டது.

இந்நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான ஜ.செ.க. உக்கிரமாக எதிர்ப்பும் தெரிவித்ததைத் தொடர்ந்து அமானாவும் பி.கே.ஆர். கட்சியும் தலா ஒருவரை மட்டுமே இணைத்துக் கொண்டு இதர இருவரை விலக்கி வைத்தன.

ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் எல்லா 28 தொகுதிகளிலும் களமிறங்கிய பக்காத்தான் வெறும் 5 தொகுதிகளை மட்டுமே தற்காத்துக் கொள்ள முடிந்தது.

பக்காத்தான் படுதோல்வியடைந்ததற்கு இது மட்டுமே காரணமல்ல. குறைவான எண்ணிக்கையிலான வாக்குப் பதிவு தங்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது எனப் பல பக்காத்தான் தலைவர்கள் சாக்கு போக்குக் கூறுகிற போதிலும் ஏன் அந்நிலை ஏற்பட்டது என்பதை அவர்கள் ஆராய்வது அவசியமாகும்.

இதற்கெல்லாம் அப்பாற்பட்டுத் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என பக்காத்தானின் அப்போதையத் தலைவர் மகாதீர் கொளுத்த ஆணவத்துடன் பேசியதால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை.

தேர்தல் வாக்குறுதிகள் ‘பைபல்’ இல்லை, அது ஒன்றும் பாறைகளில் எழுதப்படவில்லை என மிகுந்த இருமாப்புடன் அவர் பேசியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதுதான் உண்மை.

மகாதீர் தற்போது பக்காத்தானில் இல்லையென்ற போதிலும் கூட்டணியின் சார்பில் அன்வாரோ இதர பெருந் தலைவர்களோ பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியது அவசியமாகும். வாக்காளர்களின் சக்தியை அவர்கள் சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது.

இதற்கிடையே தாங்கள் எதிர்பார்த்த 18 தொகுதிகளை விடக் கூடுதலாக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் வழி மிகுந்த உற்சாகமடைந்துள்ள அம்னோ அடுத்த பொதுத் தேர்தலையும் உடனே நடத்த ஏற்பாடு செய்யுமாறு பிரதமருக்கு நெருக்குதல் கொடுக்கத் தொடங்கி விட்டது.

தற்போதைய சூழல் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்று எண்ணும் அக்கட்சியின் இவ்வெற்றி நடப்பு அரசாங்கத்தில் கூடுதல் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு திடீர் உந்துதலை வழங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.

அம்னோவின் தலைவர் அஹ்மட் ஸாஹிட் மற்றும் அதன் துணைத்தலைவர் முஹமட் ஹசான் ஆகியோருக்கு அடுத்து 3ஆவது நிலையில் உதவித் தலைவராக இருக்கும் பிரதமர்  சப்ரி கிட்டதட்ட அவர்களுடைய கைப்பாவையாகத்தான் இருந்து வருகிறார்.

மஹியாடினின் திமிர்த்ததுமான பேச்சையோ அவருடைய கட்சியின் வசமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளை பற்றியோ அம்னோ தலைமைத்துவம் இனிமேலும் பொருட்படுத்தாது என்று தாராளமாக நம்பலாம். அரசாங்க நிர்வாகத்தில் அவருடைய ஜம்பம் இனி பலிக்காது என்றே தெரிகிறது. தனது 31 தொகுதிகளைக் கொண்டு அரசாங்கத்தை அவர் கவிழ்த்தாலும் அதைப் பற்றி அம்னோ கவலைப்படப்போவதில்லை.

எனவே பிரதமர் சப்ரி அடுத்த 6 மாதங்களுக்கிடையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று கணிக்கப்படுகிறது.

இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பக்காத்தான் தனது குறைபாடுகளை நிவர்த்தி செய்து அக்கூட்டணி மீது ஒரு காலகட்டத்தில் மக்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை மீட்டெடுப்பதற்குக் குறுகிய காலமே உள்ளது.

அன்வார் பதவி விலக வேண்டும் என ஆங்காங்கே அவ்வப்போது குரல்கள் வலுத்துவரும் இவ்வேளையில் மக்களைக் கவருவதற்கான உடனடி வியூகங்களை அக்கூட்டணி உடனடியாக வரையவில்லையென்றால் அன்வாரின் பிரதமர் கனவு மட்டுமின்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் அதன் எண்ணமும் காற்றோடு கரைவது உறுதி.