மலேசியா பிரியுமா? – கி.சீலதாஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் நண்பரும் சரவாக் பயணம் மேற்கொண்டோம். அம்மாநில தலைநகர் கூச்சிங் விமான நிலையத்தில் குடிநுழைவு துறையினர் எங்களுக்குச் சரவாக்கில் தங்கியிருக்க மூன்று மாத கால அனுமதி வழங்கினர். மலேசிய குடிமகன், தீபகற்ப மலேசியாவிலிருந்து வருகிறேன். எனவே, கடவுச்சீட்டு தேவையில்லை, மலேசிய அடையாளச் சீட்டு மட்டும் போதும்.

மூன்று மாத கெடு, அதுவும் ஒரு மலேசிய குடிமகன் மலாயா மாநிலங்களில் கட்டுப்பாடின்றி பயணிப்பது போல் சரவாக் மாநிலத்தில் நுழையவோ, பயணிக்கவோ முடியாது. “ஒரே நாட்டில் இரு வேறு பயண முறையா?” என்று நானும் என் நண்பரும் உரையாடிக் கொண்டிருந்தபோது, குடிநுழைவு அதிகாரி அம்மையார் ஒருவர் எங்கள் உரையாடலைச் செவிமடுத்துவிட்டார். அவர் தெளிந்த குரலில் உரக்கமாக, “இது சரவாக்! சரவாக்! மலேசியா அல்ல!” என்றார்.

நாங்கள் அதிர்ந்து போனோம். “மூன்று மாதத்திற்குள் சரவாக்கை விட்டுக் கிளம்பாவிட்டால் என்னவாகும்?” எனக் கேட்டதற்கு அந்த அம்மையார் சிரித்துக்கொண்டே, “கவலை வேண்டாம்! என் வீட்டில் வந்து தங்கலாம்” என்றார்.

“எவ்வளவு காலத்துக்கு?” என்று வினவினார் நண்பர்.

“உங்களை நாடு கடத்தும் வரை..!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சபா, சரவாக் மாநிலங்களுக்கான தீபகற்ப மலேசியர்களுக்குப் பயண கட்டுப்பாடு இருந்தது எங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தச் சரவாக் அம்மையாரின் சரவாக் தேசிய உணர்வு எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் தேசிய சரவாக் உணர்வு மிகுந்து காணப்படுவதோடு மலேசியாவைப் பற்றி ஏதோ சங்கடமான அனுபவத்தை அது உணர்த்துவது போல் இருந்தது.

மலேசியா அமைந்தபோது சிங்கப்பூர் இணைந்து கொண்டது. எப்பொழுதும் போல் சிங்கப்பூருக்குப் பயணிப்பதில் எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. சிங்கப்பூரர் மலாயாவுக்கும், மலாயா மாநிலத்தவர்கள் சிங்கப்பூருக்கும் யாதொரு தடங்கலுமின்றி பயணிக்கலாம். சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின், சில ஆண்டுகள் இந்தக் கட்டுப்பாடற்ற பயண வசதி நீண்டது. ஆனால், அது நீடிக்கவில்லை. இரு நாடுகளுக்கிடையே நுழைவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இரு நாட்டு மக்களும் நுழைவு கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர். அந்த முறை நீடிக்கிறது. சிங்கப்பூர் சுதந்திர குடியரசு. அந்த நாட்டிற்குள் நுழைய கட்டுப்பாடு தேவைதான். மறுக்க முடியாது. ஆனால், சபா, சரவாக் மாநிலங்களில் பிற மலேசியர்களின் வருகையைக் கட்டுப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று கேட்க தோன்றுமல்லவா?

இதற்கான விடையை 1963ஆம் ஆண்டு சபா, சரவாக் மலேசியாவில் இணைவதற்கு முன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டும். சபா, சரவாக் ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் பற்றி சட்டம் இயற்ற சிறப்பு அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றன. தீபகற்ப மலேசியாவினர் அம்மாநிலங்களில் வேலை செய்ய வேண்டுமானாலும் அல்லது கல்வி கற்க முற்பட்டாலும் அனுமதி பெற வேண்டும்.

குறுகிய கால பயணத்தை மேற்கொள்வோர் தொன்னூறு நாட்கள் (மூன்று மாதங்கள்) வரை அங்கே தங்கலாம். இதை உறுதிப்படுத்தி சட்டமாக்கிவிட்டது 1959/1963ஆம் ஆண்டின் குடியேற்ற சட்டத்தின் 66ஆம் பிரிவு. சபா, சரவாக் மாநில மக்கள் தீபகற்ப மலேசியாவில் வந்து போக, வேலை செய்ய எந்தத் தடங்கலும் இல்லை.

மலேசியா அமைந்து அறுபதாம் ஆண்டை நெருங்கி கொண்டு இருக்கிறோம் (2023ஆம் ஆண்டு மலேசியா அறுபது ஆண்டுகளை அடையும்). இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எத்தகைய மலேசிய உணர்வு வளர்ந்து உறுதி பெற்றிருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மலேசியாவுக்கான பேச்சுவார்த்தை நடந்தபோது சபா, சரவாக் மக்களின் உண்மையான விருப்பம், சுதந்திர அரசியல் உணர்வு புரிந்துகொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கான விடையை உண்மையான வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் புரியும். லண்டனும், கோலாலம்பூரும், சிங்கப்பூரும் ஒன்றுகூடி நடத்திய அரசியல் நாடகம் என்று சொல்லுவோர், கருதுவோர் உண்டு. அவர்களின் கருத்து, சந்தேகம் நியாயமானதாகவே கருதும் நிலை ஏற்பட்டுவிட்டதாக அரசியல் நிபுணர்கள், விழிப்புணர்வு கொண்ட சபா, சரவாக் மக்கள், அவர்களின் தலைவர்கள் கொண்டிருப்பது கவனத்துக்குரியதே.

1963ஆம் ஆண்டுக்கு முன்பு பொதுவாகவே மலேசிய தீபகற்பத்தில் இன, சமய வேறுபாடுகள் நிலவிய போதிலும் அவை கட்டுப்பாட்டில் இருந்ததையும் அறிவோம். இந்தக் கட்டுப்பாட்டிற்கான காரணத்தை ஆராயும்போது மலேசியாவைக் காண விரும்பிய அன்றைய தீபகற்ப அரசியல் கட்சித் தலைவர்கள் தேசிய ஒருமைப்பாட்டில் கரிசனம் கொண்டு செயல்பட்டு இருக்கலாம். இன, சமய வேறுபாடுகள் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் மக்கள் ஒன்றாகவும், அச்சமின்றி வாழவும் வழிகோலும் என்ற நம்பிக்கையாகக் கூட கருதலாம்.

ஆனால், இப்படிப்பட்ட பரந்த குறிக்கோளைத் கொண்ட தலைவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை மற்ற தலைவர்களுக்கு மாற்றியபோது, அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட புது தலைவர்கள் வரலாற்று உண்மைகளை, வரலாறு கண்ட உடன்படிக்கைகளை, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளைப் பேணுவதில் கரிசனம் துறந்தனர் என்பதும் வேதனையான திருப்பமாகும்.

மலேசியாவில் இன, சமய பேதத்துக்கு இடமில்லை. மலேசியா சமயச் சார்பற்ற நாடு என்று துங்கு அப்துல் ரஹ்மான், துன் உசேன் ஓன் போன்ற தலைவர்கள் வலியுறுத்தியபோதிலும்; மலேசியர்கள் சமம் என்று அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியதை நினைவுபடுத்தியபோதிலும் குறுகிய இன, சமய பேதத்திற்கு வழி கண்டவர்தான் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது! மலேசியர்கள் சமம், சம உரிமை கொண்டவர்கள் என்ற உடன்படிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு மலாய்க்காரர் உயர்ந்தவர்கள், மலாய்க்காரர் அல்லாதார் வந்தேறிகள் என்ற நாட்டு நசிப்புக்குக் காரணமான கருத்துக்களை வெளியிட்டு உறுதிப்படுத்திய பெருமை மகாதீரையே சாரும்.

அதிகாரம் கையில் வந்ததும் அது கெடுமதிக்குத் துணையாகிவிடும் என்பார்கள். அதுபோல, அதிகாரம் கைக்கு வந்ததும் நியாயத்தையும், நியாயமான உடன்படிக்கையையும் கழற்றிவிடும் சக்திகள் மலேசிய உணர்வை, மலேசிய ஒற்றுமையைக் குலைத்தனர். அதன் விளைவு, நாட்டில் இன, சமயப் பகைமை உணர்வு மிகுந்து, சமரசம் பட்டுவிட்ட நிலையைக் காண நேர்ந்தது. அந்த நிலையில் மலேசியர்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்பதே இன்றைய உண்மையான நிலவரம்.

சமீப காலமாக சபா, சரவாக் மாநில தலைவர்கள் தீபகற்ப மலேசிய அரசியல் – அதாவது இன, சமய அரசியலுக்கு முக்கியத்துவம் தருவதை ஏற்றுக்கொள்ள மறுத்தது மட்டுமல்ல, பகிரங்கமாகவே எதிர்க்கின்றனர் என்பது தெளிவாகிவிட்டது. இந்த எதிர்ப்பானது மலேசியாவின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் தரத்தைக் கொண்டிருக்கிறது என அரசியல் மேதாவிகள் கருத்துரைப்பது நியாயமாகவே தெரிகிறது. இப்பொழுது சபா, சரவாக் அரசியல் தலைவர்கள் நடுவண் அரசு காட்டும் பாரபட்சத்தைச் சுட்டிக்காட்டி பிரிவினையை விழைவதும் கவலைக்குரிய திருப்பமாகும்.

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டரசு நிதி நிலை அறிக்கையில் பிரிவைக் காட்டும் தரங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய சபா அரசியல் கட்சித் தலைவர் இதுவரை வரி வசூலிப்பதில் காணப்படாத இன, சமய பேதம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒற்றுமையைத் தீர்மானிக்க வேண்டிய நாம், பிரிவு தரத்தை வளர்ப்பதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். சிறு நாடுகளான சிங்கப்பூரும், புருணையும் சுதந்திரமாக இயங்க முடியுமானால் இயற்கை வளம் கொண்டுள்ள சபாவும் சுதந்திரமாக இயங்க முடியும் என்று கூறியுள்ளார்.

அவர் மட்டுமல்ல மற்றொரு சபா அரசியல் தலைவர் ஜெஃப்ரி கெட்டிங்கான் சபா, சரவாக் மாநிலங்களை மோசமாக நடத்துவதைக் கண்டித்துள்ளார். அறுபது விழுக்காடு கிழக்கு மலேசியர்கள் மலேசியாவை விட்டு வெளியேற கோருவதையும் நினைவுபடுத்தியுள்ளார். இவையாவும் எச்சரிக்கை சமிக்ஞையாகும்.

ஒரு காலத்தில் ஒரு நாடாக இருந்த மேற்கு, கிழக்கு பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்து இன்று அன்றைய மேற்கு பாகிஸ்தானாகவும், கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசமாக மாறியதைக் கவனத்தில் கொள்வது முக்கியாமாகும். அந்தப் பிளவுக்கான காரணங்களில் பொருளாதார விநியோகத்தில் கிழக்கு பாகிஸ்தான் மோசமாக நடத்தப்பட்டதானது பிரிவினை உணர்வுக்கு வித்திட்டது என்று வரலாறு கூறுகிறது.

அப்படிப்பட்ட நிலை ஏற்படாது பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நடுவண் அரசுக்கு உண்டு. மலேசியாவிலிருந்து மாநிலங்கள் பிரிய முடியாது என்று வாதிடலாம். சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டதை நினைவுகூறும்போது, வெளியேற்றப்பட்டால் மட்டுமல்ல வெளியேறவும் உரிமை உண்டு என்று விவாதிக்க இடமுண்டு.

இன்று சரவாக் அரசியல் தலைவர்கள் சாதாரணமாகவே பிரிவினைக்கான காரணங்களை முன்வைப்பதைக் கவனித்தால் நடுவண் அரசு தனது அரசியல் கொள்கைகளை மாற்றி எல்லா மலேசியர்களும் சமம், சமமாக நடத்தப்படுவர் என்ற உயரிய நம்பிக்கையை நிலைநாட்டினாலன்றி, மலேசியாவின் ஆயுள் காலத்தை நிர்ணயிப்பது கடினமே.