தேசிய இலக்கியங்களாக தமிழ் மற்றும் சீன படைப்புகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் – ம,நவீன்  

கடந்த 25.11.2021 முதல், நான்கு நாட்களாக பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின்  எழுத்தாளர் ம.நவீனின் சிறப்பு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகில் நான்கு நாடுகளில் தமிழ் இலக்கியம் வேர்க்கொண்டுள்ளதாகவும், அப்படி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்  தமிழ் இலக்கியத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் மலேசியாவில் கிடைப்பதில்லை என தன் வருத்தத்தை நவீன் தெரிவித்தார். இனங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க ஒற்றை அடையாளம் கொண்ட பள்ளிகளை உருவாக்குவதைக் காட்டிலும் வெவ்வேறு இனங்களின் சிக்கல்களையும் வாழ்வியலையும் அறிந்துகொள்ள படைப்புகளின் மொழிப்பெயர்ப்பும் அதற்குறிய முன்னெடுப்புகளும் அவசியம் எனவும் இவர் குறிப்பிட்டார்.

தனது இலக்கிய முன்னெடுப்புகள், மலேசியத் தமிழ் இலக்கியச் சூழல், பேய்ச்சி நாவலின் தடை என விரிவாக நடைபெற்ற அவரின் அந்த உரையாடலில், “மலேசிய தேசிய இலக்கியமாக தமிழ் மற்றும் சீன படைப்புகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்” நவீன் தன் கருத்தைப் பதிவு செய்தார்.

‘ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா’ அனைத்துலக அளவில் மதிக்கப்படும் மலேசியாவின் மிகப் பெரிய இலக்கிய விழா ஆகும். இவ்விழா பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படுகிறது. இம்மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவின் கருப்பொருள் சிறிய அண்டங்கள் (மைக்ரோ-காஸ்மோஸ்) ஆகும்.

சாதாரண உலக வாழ்விலிருந்து அண்டவியல் கற்பனை வரை, ‘ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா 2021’இல் பகிரப்பட்டது. படைப்பாற்றலின் கட்டற்ற வெளிப்பாடும் சுதந்திரமும் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் அது எவ்வாறு பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் இக்கருப்பொருள் மையமிட்டிருந்தது.

மலேசியாவின் மதிப்புமிக்க எழுத்தாளர்களும் மொழிப்பெயர்ப்பாளர்களுமான பாலின் ஃபென் (Pauline Fan) இவ்வாண்டு விழாவின் இயக்குநராகவும், இசுடீன் ரம்லி (Izzuddin Ramli) நிர்வாகியாகவும் பங்காற்றும் இவ்விழாவில் மலேசிய, தென்கிழக்காசிய மற்றும் அனைத்துலக எழுத்தாளர்களும் பங்கேற்றனர். இவர்களோடு மலேசியத் தமிழ் இலக்கியத்தின் குரலை பதிவு செய்யும் விதமாக எழுத்தாளர் ம.நவீனுடனான உரையாடலும் மலாய் மொழியில் இடம்பெற்றது.

சிறப்பு வாய்ந்த இவ்விழாவில் மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்து ஒருவர் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன் 2019இல் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடனான கலந்துரையாடல் இவ்விழாவில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில், மதிப்புமிக்க எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான மரினா மகாதீர், சபா எழுத்தாளர் ருஹைனி மாடரின், நடிகர் வான் ஹனாஃபி போன்ற மலேசிய பிரபலங்களுடன், இந்தோனேசிய நாவலாசிரியர் ஏகா குர்னியாவான், ஜப்பானிய எழுத்தாளர் மினே மிசுமுரா, ஜெர்மன் கவிஞர் ஜான் வாக்னர், கனடிய எழுத்தாளர் சௌவன்காம் தம்மாவோங்சா, நியூசிலாந்து நாவலாசிரியர் டினா மகேரெட்டி, இந்திய எழுத்தாளர் மீனா கந்தசாமி, கென்யா-அமெரிக்க எழுத்தாளர் முகோமா வா ஙுயூ போன்ற 70க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பங்கேற்றனர். கடந்த ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பெரும்பாலும் நிகழ்ச்சிகள் இணையம் வழி ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் நடைபெற்றது.

மேலும், இத்தாலிய கவிஞர் டான்டே அலிகியேரியின் (Dante Alighieri) வாழ்க்கையையும் பணியையும் கொண்டாடுவதன் மூலம் அவரது 700வது ஆண்டு நினைவுநாளுக்கு அஞ்சலி செலுத்தியது இவ்விழா. இத்தாலியின் தூதரகத்துடன் இணைந்து, இத்தாலிய இலக்கிய அறிஞர் பேராசிரியர் கியுலியானா நுவோலி, இத்தாலியைச் சேர்ந்த மலேசிய எழுத்தாளர் மஸ்துரா அலடாஸ் ஆகியோருடன் டான்டே பற்றிய கலந்துரையாடலையும், புகழ்பெற்ற பிரிட்டிஷ்-இத்தாலிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான டிம் பார்க்ஸுடனான உரையாடலும் இடம்பெற்றது.

ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்கு ‘இலக்கிய விழாவுக்கான அனைத்துலக சிறப்பு விருது’ 2018இல் வழங்கப்பட்டது. அதுபோல தென்கிழக்கு ஆசியாவில் லண்டன் புக் ஃபேர் இன்டர்நேஷனல் எக்ஸலன்ஸ் விருதுகளில் இலக்கிய விழா விருதைப் பெற்ற முதல் இலக்கிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011இல் ஐந்து எழுத்தாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த விழா, தற்போது மலேசியாவின் மிகப்பெரிய இலக்கிய விழாவாகவும், உலகின் தலைசிறந்த இலக்கிய விழாக்களில் ஒன்றாகவும் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அனைத்துலக சிறப்பு வாழ்ந்த விழா ஒன்றில் ம.நவீன் அழுத்தமான கருத்துகளை வைத்துள்ளது அரசின் கவனத்திற்குச் செல்லும் எனக் கருதப்படுகிறது.

ம.நவீன் நேர்காணலைக் காண : https://www.youtube.com/watch?v=8p8z9oRnmVI