இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

லாவ் அகர்வால்

இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.

புதுடெல்லி: வளர்ச்சியடைந்த கொரானோ வைரஸ் தொற்றாக கருதப்படும் ஒமிக்ரான் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரசுக்கு 29 நாடுகளில் இதுவரை 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலையை பொருத்தவரை ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 கோடியே 75 பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தார். 31 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழ்ந்துள்ளதாக கூறினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்தியா முழுவதும் 2வது தவணை தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு அமைப்புகள் தீவிரப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.