தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு? – கி. சீலதாஸ்

தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு என்று புரியவில்லை. அதிலும் குறிப்பாக மலாயாவின் சுதந்திரப் பேச்சுவார்த்தையின் போது அன்றைய கூட்டணி அமைப்பில் பங்குபெற்ற அம்னோ, மசீச, ஆகிய கட்சிகள் ஏகமனதாகச் சீன, தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்குவதற்கு யாதொரு தடையும் கிடையாது என்று ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த ஒப்பந்தத்தை மீறுவது நியாயமா?

இது அல்லவா முக்கியமான, அர்த்தமுள்ள கேள்வி! அதே சமயத்தில், தேர்தல் காலங்களில் முன்னே செய்து கொண்ட ஒப்பந்தம் ஒரு பொழுதும் கைவிடப் போவதில்லை என்று மறு உறுதி செய்வதும் வழக்கமாகிவிட்டது. அதோடு நின்றுவிடவில்லை.

தாய்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டுக் கல்விக் கொள்கையின் அகற்ற முடியாத அங்கம் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார்கள். ஆனால், தாய்மொழிப் பள்ளிகளைக் குறை கூறுவதும், அவை தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒவ்வாதவை என்று ஆதாரமற்ற கருத்துகளை வாரி இரைப்பதில் சளைக்காதவர்களும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது விந்தையாக இருக்கிறது அல்லவா?

தேசிய ஒற்றுமை வெறும் பேச்சால் மட்டும் வேரூன்றி வளர்ந்துவிடாது. பல்வேறு இனத்தவர்கள், பல்வேறு சமயங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள் கொண்ட நாட்டில் குடிமக்கள் யாவரும் தங்களின் சமயம், மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவைகளுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டால்தான் நாட்டில் ஒற்றுமையைக் காண முடியும்.

ஒற்றுமை என்றால் தேர்தல் கால ஒற்றுமை, தொற்றுநோய் காரணமாக ஒன்றுபடுவது அல்லது நாடு துயரமான சம்பவத்தை அனுபவிக்கும்போது ஏற்படுவது ஒற்றுமை அல்ல. அது தற்காலிக ஒற்றுமை. தேசிய ஒற்றுமைக்குக் காரணமாக இருப்பது எல்லோருக்கும் மதிப்பளிக்கும் தரத்தைக் கொண்ட வாழ்வு. பல்லினங்கள் வாழும் நாட்டில் அவர்களின் சமயம், மொழி, கலாச்சாரம் ஆகியவைகளை மதிக்கும் தராதரம்தான் தேசிய ஒற்றுமை வளர உதவும்.

ஓர் இனத்தின் உழைப்பு, நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் அதன் பங்களிப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது அவர்கள் காட்டும் தற்காப்புக்கான உற்சாகம் யாவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டுக்கு எந்தத் தீங்கும் வராமல் பார்த்துக் கொள்ளச் சிறுபான்மையினர் ஒரு போதும் தயங்கமாட்டார்கள். எனவே, சிறுபான்மையினரின் தாய்மொழிப் பள்ளிக்கூடங்களைக் குறிவைத்துத் தாக்குவது, அடிக்கடி பிரச்சினை கிளப்புவது அரசியல்வாதிகளின் நாணயமற்ற போக்கை வெளிப்படுத்துவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன? தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதற்கு யாதொரு தடையும் இருக்காது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையை அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை என்று விவாதிப்பது வரலாற்று உண்மையை மறைக்கும் முயற்சியாகும். நாணயமில்லாத, நாணயத்தில் பற்று இல்லாதவர்களின் தரமற்ற அரசியல் என்றாலும் பொருந்தும்.

சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் மீதான எதிர்ப்பை அடிக்கடி எழுப்புவது ஒரு அரசியல் நடவடிக்கையாகவே மாறிவிட்டது. சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழி மீது ஏற்பட்டிருக்கும் மிரட்டலைத் தடுப்பது எப்படி என்று சிந்திக்கும் போது அவர்களின் அடிப்படை தேவைகளை,

உரிமைகளை மறந்துவிடுவார்கள். காரணம், மொழி பாதுகாப்பு முக்கியமென்று அவர்கள் நம்புவதால் அந்த நம்பிக்கையில் வாழ்வதால் தாய்மொழிப் பள்ளிகள் மீது அடிக்கடி பிரச்சினை கிளப்புவோர் உலக அனுபவம் இல்லாதவர்கள் என்று சொல்லுவதா அல்லது மேலே குறிப்பிட்டிருப்பது போல் இந்த மொழிப் பிரச்சினையை அடிக்கடி எழுப்புவதில் ஒருவகை மனத்திருப்தி பெறுகிறார்களா? அல்லது சிறுபான்மையினர் வியாகூலத்தை உசுப்பிவிடுவதில் மகிழ்வைக் காண்கிறார்களா?

மொழி நிபுணர்கள் பலர் தாய்மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதிலும் தயங்குவதில்லை. தாய்மொழியில் புலமை கண்டவர்கள் பல மொழிகளிலும் புலமை பெற்றுச் சிறப்படைவார்கள் என்பது துல்லியமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதும், சுதந்திரம் பெற்ற பிறகும் எப்படிப்பட்ட கல்விக் கொள்கை பொருத்தமானது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை மறைக்க முயலுவது நேர்மையானவர்கள் கையாளும் அணுகுமுறை அல்ல.

சுதந்திரத்துக்கு முன்பு கூட்டணி கட்சி நடத்திய ஆய்வில் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் டாக்டர் இஸ்மாயில் மற்றும் சில அம்னோ தலைவர்களும், துன் எச்.எஸ்.லீ, துன் டான் சுய் சின், டாக்டர் லிம் சொங் யூ மற்றும் சில மசீச தலைவர்களும், துன் சம்பந்தன், கே. ராமநாதன், கே. எல். தேவாசர், கேஹர் சிங், டான் ஶ்ரீ வி. மாணிக்கவாசகம் மஇகா தரப்பிலும் கூடி ஆய்வு நடத்திக் கண்ட முடிவே தாய்மொழிப் பள்ளிகளுக்கான பாதுகாப்பு. துன் ரசாக் வகுத்த கல்விக் கொள்கையில் தாய்மொழிப் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு இருந்ததை மறுக்க முயலுவது, மறக்க முயலுவது அரசியல் மோசடி என்றாலும் தவறில்லை.

இன்று மலாய்க்காரப் பிள்ளைகள் சீன, தமிழ் பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலுகிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது அவர்களின் பெற்றோர் பல மொழிகளைக் கற்பதில் உள்ள பலனை உணர்ந்துள்ளனர் என்பதைத்தான் சுட்டுகிறது.

அவர்களின் பல மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஆவலை, உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. ஓர் உண்மையை இந்தத் தாய்மொழி எதிர்ப்பாளர்கள் உணர்வது மேல். தாய்மொழி கற்பவர்கள் இயல்பாகவே சிந்திக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அது எளிதாக வரும். ஆனால், வெறும் பிற மொழியைக் கற்றவன், பிற மொழியில் திறனைக் கடன் வாங்கிச் சிந்திக்க நேரிடும். சுருக்கமாகச் சொன்னால் தாய்மொழி கல்லாதவன் இயல்பாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்க மாட்டான்.

இந்தக் காலகட்டத்தில் மலேசியக் குடும்பத்தைப் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. மலேசியக் குடும்பம் என்றால் என்ன? வேறுபட்ட இனங்கள், சமயங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகியவைகளைக் கொண்ட சமுதாய அமைப்புதானே மலேசியக் குடும்பமாக இருக்க முடியும்.

ஆரம்பமே பல்வேறு இனங்கள் ஒன்றுகூடிச் சமய, மொழி, கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமை காண முடியும் என்ற பரந்த நோக்கத்தைத்தானே அது வெளிப்படுத்துகிறது. ஒரே இனம், ஒரே சமயம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதுதான் மலேசியக் குடும்பம் என்று எவரும் ஒருபோதும் சொன்னதில்லையே. இதை உணராமல் செயல்படுவது விந்தையிலும் விந்தை.

சிறுபான்மையினர் புதிதாக எதையும் கோரவில்லை. சுதந்திரத்திற்கு முன்பும், அதற்குப்பிறகு கொடுக்கப்பெற்ற, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதித்து நடப்பதே நாணயமான அரசியல் போக்கு என்பதையே மீண்டும், மீண்டும் நினைவுறுத்துகின்றனர்.

பேச்சுரிமை என்ற பெயரில் அடிக்கடி சிறுபான்மையினர்க்கு எரிச்சல், அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் பொறுப்பும், ஆற்றலும் நடுவண் அரசுக்கு உண்டு. நீதிமன்றம் கூட வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு தாய்மொழிப் பள்ளிகள் மீதான எதிர்ப்பை நிறுத்த முடியும். இதுவும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே கருதப்படும்.

தாய்மொழிப் பள்ளிகளை எதிர்ப்பவர்கள் தெளிந்த அறிவுடையவர்களாக மாறுவார்களா என்பதே கேள்வி! அதற்கான விடையைக் காணும் பொறுப்பு நடுவண் அரசிடமும், நாடாளுமன்றத்துக்கும், நீதிமன்றத்திற்கும் உண்டு.