பார்லிமென்ட் ஒத்திவைப்பு; இலங்கையில் குழப்பம்

கொழும்பு : பார்லிமென்டை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீரென ஆசிய நாடான சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

இது இலங்கை அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் பார்லிமென்ட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த 10ம் தேதியுடன் முடிந்தது. அடுத்த அமர்வு ஜனவரி 11ம் தேதி துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் கூட்டத் தொடரை ஜனவரி 18ம் தேதி வரை ஒத்திவைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், அவர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். மருத்துவ காரணங்களுக்காக அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.நிதி சிக்கலில் இலங்கை தவித்து வரும் நிலையில் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்திடம் இருந்து கடன் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தை நேற்று கூட்டி விவாதிக்கப்பட இருந்தது. அந்தக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.