தனி ஒருவராக தென் துருவத்தை அடைந்த முதல் பெண்- இந்திய வம்சாவளி பெண் சாதனை

ப்ரீத் சண்டி

அண்டார்டிகா: இந்த பயணத்திற்காக ப்ரீத் சண்டி பிரெஞ்ச் ஆல்ப் மலைகளிலும், ஐஸ்லாந்திலும் இரண்டரை வருடங்கள் பயிற்சி எடுத்துள்ளார்.

தனி ஒருவராக தென் துருவத்தை அடைந்த முதல் பெண்- இந்திய வம்சாவளி பெண் சாதனை

இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியான ப்ரீத் சண்டி, தனி ஒருவராக தென் துருவத்தினை சென்றடைந்த முதல் பெண் என்ற பெருமையை  பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன் பயணத்தை தொடங்கிய ப்ரீத் சண்டி, அண்டார்டிகா முழுவதும் பனிச்சறுக்கு செய்தபடியே  40 நாட்களில் 1,126 கி.மீ கடந்து சாதனை பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அண்டார்டிகா பூமியின் மிகவும் குளிர்ந்த கண்டம். யாரும் அங்கு நிரந்தரமாக வாழ முடியாது. அண்டார்டிகா பயணத்திற்கு திட்டமிட்டபோது அங்குள்ள நிலைமை எனக்கு அவ்வளவாக தெரியாது. பிறகு இரண்டரை வருடங்கள் பிரெஞ்ச் ஆல்ப் மலையிலும், ஐஸ்லாந்தில் உள்ள மலைகளிலும் பயிற்சி எடுத்தேன். அண்டார்டிகா பயணத்தின்போது உணவு, உடை, மருத்துவ சாதனங்கள் என 90 கிலோ எடையை முதுகில் சுமந்து சென்றேன்.

இந்த பயணத்தை முடித்தபோது பெரும் நம்பிக்கை எனக்குள் தோன்றியிருக்கிறது. ஒருவர் தன் மீது முழு நம்பிக்கை வைத்து எல்லைகளை கடந்து முயற்சி செய்தால் பெரிதாக சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை அளிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு ப்ரீத் சண்டி கூறினார்.

ப்ரீத் சண்டி பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து அவருக்கு பிரிட்டன் ராணுவத்தின் தலைமை அதிகாரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.