திருகோணமலை எரிபொருள் தாங்கிகள்: இந்தியா, இலங்கை உடன்படிக்கை

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கையில் இந்தியவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை நேற்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மற்றும் ரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட் ஆகிய தரப்பினர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் முக்கிய அம்சங்களை மூன்று பிரிவுகளாக பிரித்து இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் தற்போது பயன்படுத்தப்படுகின்ற 14 எரிபொருள் தாங்கிகளை,: அதே நிறுவனத்திற்கு வழங்க இந்த உடன்படிக்கையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் பயன்படுத்தப்படுகின்ற 14 எரிபொருள் தாங்கிகளை, 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 61 எரிபொருள் தாங்கிகளை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு உடன்படிக்கையின் ஊடாக இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, 51 சதவீத பங்குகள் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கும், 49 சதவீத பங்குகள் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திற்கும் உரிமையாக்கும் விதத்தில், இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்த வகையில் இயங்குவதற்காக ரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட் என்ற பெயரில் நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாகவே இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட்

ரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட் நிறுவனமானது, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் துணை நிறுவனமாக செயற்படவுள்ளது.

இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் 7 அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், அதில் 4 பேர் பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் நியமிக்கப்படுபவர்களாவர்.

எஞ்சிய மூவரும் இந்திய தரப்பினர் என்பதுடன், நிறுவனத்தின் தலைமை பொறுப்பு இலங்கை வசமே காணப்படும் என உடன்படிக்கையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ரின்கோ பெற்றோலியம் டர்மினல் பிரைவட் லிமிட்டட் நிறுவனமானது, இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கக்கூடியது என்பதுடன், இந்த நிறுவனம் தொடர்பிலான கணக்காய்வுகள் குறித்து நாடாளுமன்ற கோப் குழுவில் விசாரணைகளை நடத்தக்கூடிய வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பக்கூடிய வகையிலும் இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் முக்கியத்துவம்

திருகோணமலை கடற்கரை பகுதியை அண்மித்து சுமார் 800 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், 99 எரிபொருள் தாங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பிரித்தானிய ஆட்சியில் இருந்த 1930ம் ஆண்டு காலப் பகுதியில் இந்த எரிபொருள் தாங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த எரிபொருள் தாங்கிகளில் கட்டுமானப் பணிகள் சுமார் 1924ம் ஆண்டு காலப் பகுதியில் தொடங்கப்பட்டு, 1930ம் ஆண்டு காலப் பகுதியில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த காலத்தில் காணப்பட்ட அதிவுயர் தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டப்பட்டுள்ள இந்த தாங்கிகள், சுமார் 45 அடி உயரமும், 350 அடி சுற்றளவும் கொண்டதாக காணப்படுகின்றன.

இரண்டாவது உலக போரின் போது, இந்த எண்ணெய் தாங்கிகள், ஆங்கிலேயர்களுக்கு பாரிய பங்களிப்பை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் தாங்கிகளுக்கான உடன்படிக்கையே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் வழக்கு

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனத்துடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 7) அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சுனில் வட்டகலவின் ஊடாக, தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வக்கமுல்லே உதித்த தேரரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர், ஜனாதிபதி செயலாளர், நிதி அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், வலுசக்தி அமைச்சர், கணக்காய்வாளர் உள்ளிட்ட 47 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.