துபாயில் உலகின் மிகப்பெரிய ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’..!

மிதக்கும் பூங்கா

Facebook  Twitter  Mail  Text Size  Printதுபாயில், பிரம்மாண்டமான ‘மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு’ கின்னஸ் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

துபாய்,  துபாயில் பார்வையாளர்களை கவரும் வகையில் சாகச விளையாட்டுகளுடன் கூடிய பிரமாண்டமான ‘மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கான துறையின் தலைமை செயல் அதிகாரி அகமது அல் காஜா கூறியதாவது:-

துபாய் சுற்றுலாவிற்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்க்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு துபாய் சுற்றுலாத்துறை மற்றும் அமீரகத்தில் இயங்கிவரும் தனியார் சுற்றுலா நிறுவனமும் இணைந்து துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவில் தண்ணீரில் மிதக்கும் பூங்காவை உருவாக்கியது.

இந்த பூங்காவானது துபாய் நகரில் முக்கிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு சிறப்பு வாய்ந்த பகுதியான ஜுமைரா கடற்கரை குடியிருப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 328 அடி தொலைவில் கடல் தண்ணீரில் உருவாக்கப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்டது

இதில் ஏற்கனவே மிதக்கும் தண்ணீர் பூங்காவானது 252 அடி நீளமும் 115 அடி அகலமும் கொண்ட ரப்பர் தளமானது கடல் நீரில் மிதக்குமாறு அமைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த பூங்கா 3 மடங்கு அளவில் மிக பிரமாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தற்போது இதன் பரப்பளவு 42 ஆயிரத்து 400 சதுர மீட்டராகும். ஏற்கனவே சுற்றுலா சின்னத்தின் வடிவமைப்பில் இருந்த இந்த பூங்கா தற்போது ‘ஐ லவ் (இதய உருவம்) எக்ஸ்போ 2020 துபாய்’ என ஆங்கில எழுத்துருக்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது விமானத்தில் இருந்து பார்க்கும்போது வாசகம் போல கடலில் இந்த பூங்காவை காணமுடியும்.

கின்னஸ் சான்றிதழ்

இந்த மிதக்கும் அமைப்புகள் தண்ணீரில் மிதப்பதற்காக செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட கடினமான வளையக்கூடிய ரப்பருடன் கலந்த பிளாஸ்டிக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்புகள் அலுமினியம் போன்ற லேசான உலோகங்களால் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக எடையை தாங்கும் அளவிற்கு உறுதியாக உள்ளது.

இந்த பூங்காவிற்கு செல்ல சிறு படகுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த படகுகள் மூலம் மிதக்கும் தண்ணீர் பூங்காவினுள் பார்வையாளர்கள் செல்லலாம்.

துபாய் நகருக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு உலகின் மிகப்பெரிய ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’ என்ற பிரிவில் கின்னஸ் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.