பெஜுவாங்ஙோடு சரிந்தது மகாதீரின் செல்வாக்கு!

இராகவன் கருப்பையா –முன்னாள் பிரதமர் மகாதீரின் அரசியல் செல்வாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது என்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

கடந்த ஆண்டு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட அவருடைய பெஜுவாங் கட்சி அத்தேர்தலில் படுதோல்வியடைந்தது மட்டுமின்றி போட்டியிட்ட எல்லா 42 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து வரலாறு காணாதப் பின்னடைவை மகாதீருக்கு ஏற்படுத்தியது.

மக்கள் இந்த அளவுக்குத் தன்னை புறக்கணிப்பார்கள் என்று கொஞ்சம் கூட அவர் எதிர் பார்த்திருக்க மாட்டார். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ எனும் கூற்றுக்கு ஏற்ப நாடளாவிய நிலையில் பெரும்பாலான மக்களின் நிலைப்பாட்டை ஜொகூர்  வாக்காளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர் என்பதுதான் உண்மை.

கடந்த 2016ஆம் ஆண்டில் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட முஹிடினுக்கும் தனது மகன் முக்ரிஸுக்கும் அரசியல் மறு வாழ்வளிக்கும் நோக்கத்தில் பெர்சத்து கட்சியை அவர் தொடக்கியது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.

பிறகு அக்கட்சியை பக்காத்தான் கூட்டணியில் இணைத்து 14ஆவது பொது தேர்தலில் பாரிசானை வீழ்த்துவதற்கு பெரும் பாடுபட்டு வெற்றி பெற்றது எல்லாமே வரலாறு. அத்தருணத்தில் அரசியல் மாற்றத்தை விரும்பிய எல்லாருமே அவரைப் போற்றி புகழ்ந்து  உச்சத்தில் வைத்திருந்தனர்.

ஆனால் அன்வாரைப் பிரதமராக்கும் விவகாரத்தில் ‘அடி நாக்கில் நஞ்சும் நுனி நாக்கில் அமிர்தமும்’ போன்ற அவருடையப் போக்கை மக்கள் உணர தொடங்கியது முதல் அவருடையப் புகழ் தேய்பிறையைப் போலாகியது.

அதே காலகட்டத்தில் ‘மலாய்க்காரர்களின் தன்மான மாநாடு’ எனும் ஒரு நிகழ்வில் இனத்துவேசக் கருத்துக்களை உமிழ்ந்து ஒட்டு மொத்த மக்களின் வெறுப்பைச்  சம்பாதித்துக் கொண்டதையும் நாம் நினைவுகூரத்தான் வேண்டும்.

சுமார் 22 மாதங்கள் ஆட்சியிலிருந்த பக்காத்தான் அரசாங்கம் கவிழ்வதற்கு வித்திட்ட அவரை பிறகு  பகிரங்கமாகவே மக்கள் வசைப்பாடத் தொடங்கியதும் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

புறவழியாக ஆட்சியைக் கைப்பற்றிய களிப்பில், ‘ஏறிய ஏணியை எட்டி உதைப்பதை’ போல மகாதீரை கட்சியை விட்டு முஹிடின் தூக்கி எறிந்த போது அவர் மீது சினம் கொண்டிருந்த மிதவாத  மக்களுக்கு ஒரு வகையில் சந்தோசம்தான்.

லங்காவி தீவின் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கெடாவின் ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினரான முக்ரிஸை எப்படியாவது மலேசிய அரசியலில் முன்வரிசைக்குக்  கொண்டு வந்துவிட வேண்டும் எனும் எண்ணத்தில் ஸ்ரீ காடிங் உறுப்பினர் ஷாருடினையும் குபாங் பாசு உறுப்பினர் அமிருடினையும் தன்னுடன் இணைத்து கொண்டு பெஜுவாங் கட்சியைத் தொடக்கினார்.

யாரையாவது சண்டை இழுத்துக் கொண்டே இருக்கும் போக்குடைய அவர் சீனர்கள் உணவு உண்பதற்குப் பயன்படுத்தும் குச்சிகள் தொடர்பாகக் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு எதிர்மறையான கருத்தை வெளியிட்டு அச்சமூகத்தின் வெறுப்புக்கும் ஆளானார்.

அண்மையில் உடல் நலக் குறைவால் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்ட அவர் தெய்வாதீனமாகக் குணமடைந்து ஜொகூர் தேர்தலில் தனது கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தது ஆச்சரியம்தான். இருந்த போதிலும் மக்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் புலப்படுத்தியுள்ளன.

அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி குறைந்தது 120 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் எனக் கடந்த ஆண்டில் அவர் அறிவித்திருந்த போதிலும் அதற்கான சாத்தியம் இல்லை என்றே இப்போதுத் தோன்றுகிறது.

அந்திம வயதில் இருக்கும் அவருடைய செல்வாக்கு பெருமளவு சரிவு கண்டு தற்பொழுது அடிமட்டத்தில் இருக்கும் சூழலில் அவருடைய கட்சி மட்டும் எப்படித் தலை தூக்க முடியும் எனும் ஐயப்பாடு எல்லாரது மனங்களிலும் உள்ளது.

அவருடனான கடந்த கால கசப்பான அனுபவங்களையும் ஜொகூர் தேர்தல் முடிவுகளையும் வைத்துப் பார்த்தால் பக்காத்தானோ முஹிடினின் பெரிக்காத்தானோ அவரையோ அவருடைய கட்சியையோ சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை.

இந்நிலையில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் அவருடைய செல்வாக்கும் பெஜுவாங் கட்சியோடு வீழ்ச்சி காணும் என்பதுத் திண்ணம்.