புத்தாண்டு படுத்தும் பாடு – முனைவர் குமரன் வேலு

நான் சிறுவனாக இருந்த அந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, சித்திரை புத்தாண்டுக்குப் புத்தாடை உடுத்திய வழக்கம் எல்லாம் இருந்ததே இல்லை.

பிற்பாடு, இந்தச் சமூக ஊடகங்களின் உதவியால் சித்திரை மாதம் புகழ்பெறத் தொடங்கிய பின்புதான், அப்படி ஒரு புத்தாண்டு இருப்பதே எனக்குத் தெரிய வந்தது.

விவசாயக் குடியில் பிறந்த என்னைப் போன்றோர்க்குத் தைப்பொங்கல் விழா மட்டுமே புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக உலாவர உதவியது.

சித்திரை மாதம் 1ஆம் தேதி, கோயிலில் பஞ்சாங்கம் படித்துப் பலன் சொல்லும் வழக்கம் இருந்தது என்பது மட்டும் தெரியும். அது சோதிடம் சார்ந்த கணிப்பு மாதிரியும் இருந்தது.

விவசாயிகளுக்குப் பஞ்சாங்கம் பற்றிய அக்கறை எல்லாம் இல்லை. வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்பதுதான் அவர்கள் அறிந்த மகிழ்ச்சி.

மழைக்காலம் தொடங்கியதும், விவசாயிகள் கழனியில் நடவு நட்டு நெற்பயிர் வளர்ப்பார்கள். இது ஆவணி – புரட்டாசி மாதம் அதாவது செப்டம்பர் மாதம். அதன் பின் தை மாதம் – ஜனவரியில் அறுவடை செய்வார்கள். இது ஆண்டாண்டு தொடரும் வழக்கம். இந்த அறுவடைத் தொடங்கி அடுத்த அறுவடை வருவதற்கு ஓராண்டு காலம். இதுதான் எளிய முறையில் பருவ காலத்தைக் கணக்கிடும் முறை.

அறுவடை நிரம்பியதும், வீட்டில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். அறுவடை காலத்தின் இறுதியை அவர்கள் விழாவாகக் கொண்டாடினர். அதுவே பொங்கல் நன்னாள். அதுவே, மறு ஆண்டு வரும் வரைக்குமான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுவே, புத்தாண்டின் தொடக்கம். இளம் வெப்பம் இதமாக இருக்கும் காலம்.

அறுவடைக்குப் பின் காலியாக இருக்கும் வயல்களில் உரம் கூடுவதற்குக் கால்நடைகளை விடுவார்கள். விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள்; குலதெய்வத்திற்குப் பொங்கல் வைப்பார்கள்; இளவட்டங்களுக்குப் பெண்பார்த்து மணமுடிப்பார்கள்; உறவினரைச் சென்று காண்பார்கள். மகிழ்ச்சியான தருணங்கள் நிரம்பிய காலம்தான் இந்தத் தை மாதம்.

இதற்குத் தையென்று பெயர் இட்டவர்கள் யாரென்று ஆராய நான் முயலவில்லை. ஆனால், அந்த மாதம் தரும் மகிழ்ச்சியைப் பிற மாதங்கள் தருவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் அது வருகிறது. புதியன புகுந்து பழையன கழிகிறது. இதுவே தமிழர்க்குப் புத்தாண்டு.

அந்தத் தைமாதம் தான், வான்வெளியில் சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். சோதிடப்படி அன்று தை மாதம் 1 ஆம் தேதி. அதாவது ஜனவரி 14. அதை உத்தராயணம் என்கின்றனர். உத்தாரா – utara- வடக்கு என்றும், அயணம் – பயணம் – செலவு – என்றும் பொருள் படும்.

வடக்கு நாடுகளில் டிசம்பர் – மார்ச்சு வரை குளிர்காலம். இந்தியாவின் வட மாநிலங்களில் குளிர் மிகுந்த காலம்.

அதுவரை வடக்கில் குளிராக இருந்த நிலையில், ஜனவரி 14 இல் சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கிய பின்பு மெல்ல மெல்ல குளிர்காலம் குறைந்து, மார்ச்சு- ஏப்பரலில் ( பங்குனி- சித்திரை) இளவேனில் அல்லது வசந்தகாலம் தொடங்குவதாகவும். அன்றுதான் சித்திரை 1 அல்லது ஏப்ரல் 14 என்று வானசாத்திர சோதிட அடிப்படையில் புத்தாண்டு என்கின்றனர் இந்துக்கள். அன்று சூரியன் மேச ராசியில் நுழைந்து சஞ்சாரம் செய்வதுதான் புத்தாண்டு என்கின்றனர். இதை வட இந்திய இந்துக்களும் ஏற்கின்றனர்.

ஆங்கிலேயர்கள் மார்ச்சு 20-21 இல் vernal equinox , அதாவது இரவும் பகலும் சம அளவு உள்ள காலம் என்றும் , vernal- பூக்கும் காலம் என்றும் கூறுகின்றனர். எனவே, அவர்களும் மார்ச்சு- ஏப்ரல்- மே மாதங்களை வசந்த காலம் என்கின்றனர். பண்டைய ரோமானியர்கள் , ஈரான், இசுரேல் மக்கள் மார்ச்சு 21-25 ஆம் தேதி புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதே ஏப்ரல் மாத கால கட்டத்தில், தமிழ்நாட்டில் கடுமையான வெயில் காலம். மண்டையைப் பிளக்கும் வெயிலால் வெப்ப நோய்கள் ஏற்படும். அம்மை நோயும் அதில் ஒன்று. வறட்சியால் பாளம் பாளமாக பூமி பிளந்து கிடக்கும்.

தமிழ் விவசாயிகள் அந்தக் காலக்கட்டத்தில் மங்கல காரியம் எதையும் செய்ய மாட்டார்கள். மாறாக, மஞ்சள் நீராடி கோயிலில் விழா எடுப்பார்கள். அது ஒரு வகையில் வெப்பத்தைத் தணிக்கும் வழிமுறை. எனவே, தமிழர்களுக்குச் சித்திரை விழா புத்தாண்டு அல்ல.

பின்னாளில் இந்து சோதிடக்காரர்கள் சூரியன் மேச ராசியில் நுழையும் நாள் ஓர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டு காலத்தை வகுத்ததால் ஏற்பட்ட சிக்கல் இன்று தமிழரைப் பிளவு படுத்தி விட்டிருக்கிறது. ஏப்ரல் 14 அல்லது சித்திரை 1 புத்தாண்டு என்பது தமிழர்க்கு மட்டும் உரியது அன்று.

தாய்லாந்துக்காரர்கள், பர்மியர்கள், சிங்களர்கள், லாவோசு, சீக்கியர்கள், மலையாளிகள், நேப்பாளிகள், வங்காள தேசத்தினர் என, சூரியனை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக்கணக்கைக் காப்பியடித்தவர்கள் எல்லாம் ஏப்ரல் 14இல் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

பிற இனங்களின் புத்தாண்டை நம் தலையில் திணிக்கும் பழக்கம் 1800 ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. தனித்த அடையாளத்தைக் கொண்ட இனமாம் தமிழினம், தனக்கான பாரம்பரிய தைமாதத்தில் அதுவும் அறுவடைக் காலத்தில் புத்தாண்டு கொண்டாடினால் ஆபத்து ஒன்றும் ஏற்பட்டு விடாது என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும்.

தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்று ஏற்பவர்கள் வாருங்கள். இல்லையெனில், சித்திரைப் புத்தாண்டு என்று கூறிக் கொண்டாடிக் கொள்ளுங்கள். அதைத் தமிழ்ப்புத்தாண்டு எனாதீர்கள்.