மலேசிய சிறையில் மரணம், சிங்கப்பூரிலும் அவலம்!

இராகவன் கருப்பையா –போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த வாரம் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரனின் துயரமான முடிவு நமக்கு நிறைய பாடங்களை கற்றுத்தந்துள்து.

இச்சம்பவம் அனைத்துலக ரீதியில் அதிக அளவிலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள போதிலும் இதில் பெருமைப்படவோ, கொண்டாவோ, யார் மீதும் கோபப்படவோ ஒன்றுமில்லை. மாறாக அவருடைய குடும்பத்தினர் கரைபடிந்த வடு ஒன்றை நிரந்தரமாகச் சுமக்க வேண்டிய ஒரு சூழலைத்தான் விட்டுச் சென்றுள்ளது.

மலேசியாவில் தடுப்புக் காவலின் போது மர்மமான வகையில் மரணமடைவோரில் கனிசமான அளவு நம் இன இளைஞர்கள்தான் என்பது ஏற்கனவே நமக்கு வேதனையான ஒரு விசயமாக உள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலுக்காக தூக்கிலிடப்படும் மலேசியர்களிலும் நம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் அதிகம் எனும் விவரம் நமக்கு இரட்டிப்பு சோகத்தையும் அவமானத்தையுமே ஏற்படுத்துகிறது.

நம் நாட்டில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் இருந்து கடந்த மாதம் 15ஆம் தேதி வரையில் மொத்தம் 15 தடுப்புக் காவல் மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்தப் புள்ளி விவரத்தின் படி சராசரி வாரத்திற்கு ஒரு மரணம் ஏற்படுகிறது. இவர்களில் அதிகமானோர் இந்திய இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய திடீர் மரணங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கான இயலாத நிலையில் நம் சமூகம் இன்னமும் தல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் சிங்கப்பூரில் ஒன்றன் பின் ஒன்றாக நம்மவர்கள் தூக்கிலிடப்படுவது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போலத்தான் உள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் நாம் 7 விழுக்காட்டிற்கும் குறைவுதான் என்ற போதிலும் இந்தச் சூழலில் மாட்டித் தவிப்போரின் எண்ணிக்கை மற்ற இனத்தவரைவிட பன்மடங்கு அதிகமாகும் என்பது மிகவும் வேதனைக்குறிய ஒன்றாகும்.

நாகேந்திரனுக்கு முன் இதர பல இளைஞர்களின் வழக்குகளோடு ஒப்பிடும் போது கடந்த 2017ஆம் ஆண்டில் 29 வயது பிரபாகரன், அதற்கடுத்த ஆண்டில் 31 வயது பிரபா, 3 ஆண்டுகளுக்கு முன் 35 வயது பன்னீர்செல்வம் ஆகியோரின் மரண தண்டனைகள் பல்வேறுத் தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது.

இருந்த போதிலும் நாகேந்திரன் மனநலம் குன்றியவர் என எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபிக்க முயன்றதால் இவருடைய வழக்கு அனைத்துலக நிலையில் இலட்சக்கணக்கான அனுதாபிகளின் கவனத்தை ஆட்கொண்டது.

நமது பேரரசர், பிரதமர் சப்ரி, வெளியுறவு அமைச்சர் சைஃபுடின், பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் ப்ரன்சன், பிரபல திரைப்பட நடிகர் ஸ்தீவன், ஆகியோர் உள்பட மேலும் பலர் சிங்கை அரசிடம் முறையீடு செய்தனர்.

ஆனால் சிங்கப்பூர் அரசாங்கம் கொஞ்சமும் மசியவில்லை. எல்லாமே சட்ட ரீதியாகத்தான் நடைபெருகிறது என மிகச் சுருக்மாக அவர்கள் பதிலலித்துவிட்டார்கள்.

ஆயிரம் குடும்பங்களை காப்பாற்றுவதற்காக ஒருவரைத் தூக்கிலிடுவது தவறில்லை என அந்நாட்டு அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர். அக்கருத்து நம் சிந்தனைக்கு மனிதாபிமானமற்ற ஒன்றாக உள்ளது என்றாலும் அதில் நியாயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

நூற்றுக்கும் மேற்பட்ட ம.இ.கா. உறுப்பினர்களும் கூட தலைநகர் ஜாலான் துன் ரஸாக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திற்கு வெளியே நாகேந்திரனுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதுபோன்ற விசயங்களில் அமைதியாக முறையீடு செய்வதே விவேகமாகும். கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் சிங்கை அரசாங்கம் பயந்துவிடுமா என்ன? இப்படி முரட்டுத்தனமாக அனுகினால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதுதான் உண்மை.

இதற்கிடையே கடந்த வாரம் நிறைவேற்றப்படவிருந்த தட்சிணாமூர்த்தி எனும் 36 வயதுடைய மற்றொரு மலேசியரின் மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் இவர்களைப் போன்ற மற்ற இளைஞர்களை தொடர்ந்து கைக்கூலிகளாகப் பயன்படுத்துவதற்கு புதிய யுக்திகளைக் கையாளக் கூடும். ‘ஒரே நாளில் கை நிறையப் பணம்’ எனும் இனிப்பைக் காட்டும் அவர்களுடைய மாய வலைகளில் நமது இளைஞர்கள் இனிமேலும் சிக்காமல் இருப்பது அவசிமாகும்.

இப்படிப்பட்ட விநியோகஸ்தர்கள் என்னவோ நிம்மதியாகத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நமது இளைஞர்கள் உணர வேண்டும். போதைப் பொருளை கடத்திச் செல்பவர்களின் வாழ்க்கை பாழாய்ப் போவதைப் பற்றி அவர்களுக்கு கிஞ்சிற்றும் கவலையில்லை.

இத்தகைய அவலம் மேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நமது இளைஞர்கள் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் பொற்றோர் மற்றும் உடன் பிறப்புகளைப் பற்றியும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதற்கு ஏற்ப, குற்றச் செயல்களில் ஈடுபடும் நமது இளைஞர்கள் இருண்ட இலக்கை விட்டொழித்து நேர்வழியை நாடுவது அவசியமாகும்.