பதுங்கு குழிகளில் ஒழிந்த ராஜபக்ச குடும்பம்:ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்க தயார்

ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கம் ஒன்றின் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனது ஊடகப் பிரிவின் ஊடாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் நாடக மடம்

நாடாளுமன்றம் நாடக மடமாக செயற்படுவது தொடர்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இருக்கும் வெறுப்பு மேலும் அதிகரிக்கும். நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சி என அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மிகவும் கவலைக்குரிய நிலைமை. நாடு தற்போது வங்குரோத்து அடைந்து விட்டது. இந்த வங்குரோத்து நிலைமை காரணமாக நாட்டில் வாழும் 55 லட்சம் குடும்பங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

வரலாற்றில் முதல் முறையாக எமது நாட்டின் சாதாரண மக்கள் வீதிகளுக்கு வந்துள்ளனர். உழைக்கும் மக்கள் தாம் பணிப்புரியும் இடங்களில் இருந்து வீதிக்கு வந்துள்ளனர்.

தொழிசார் நிபுணர்கள் தமது தொழிலை கைவிட்டு, அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகி வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இப்படியான நிலைமையில் நாடாளுமன்றம் தனது பொறுப்பை நிறைவேற்றாது, வெறும் நாடக மடமாக செயற்படுவதால், இளைய தலைமுறையினர் மத்தியில் இருக்கும் வெறுப்பு மேலும் அதிகரிக்கும்.

இதனை எண்ணி நான் வெட்கப்படுகின்றேன். மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என்பதை கண்பிக்கும் மிக அற்புதமான சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த அற்புதமான சந்தர்ப்பம் சில குழுவாத நபர்களின் வேலைத்திட்டம் காரணமாக இல்லாமல் போனது. நாடாளுமன்றத்தின் பொதுவான நடத்தை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வருத்தப்படுகிறேன்.

அத்துடன் வெட்கப்படுகிறேன். நாட்டின் இளைய தலைமுறையினர் மற்றும் நாட்டின் பொது மக்கள் முனனெடுத்து வரும் போராட்டம் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

பதுங்கு குழிகளில் ஒழிந்த ராஜபக்ச குடும்பம்

நாட்டை வஞ்சமாக கொள்ளையிட்ட குடும்பத்திற்கு 55 லட்சம் குடும்பங்களை தமக்குள் கீழ் வைத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல முடியாது. மக்களுக்கு பதுங்கு குழிகளையும் வேலிகளையும் அமைக்க முயற்சித்தாலும் உண்மையில் ராஜபக்ச குடும்பமே தற்போது பதுங்கு குழிகளுக்குள் ஒழிந்து கொண்டிருக்கின்றது.

அதேபோல் எதிர்க்கட்சி கூறும் நம்பிக்கை எப்படி அரசாங்கத்தின் மீது இருக்கும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால், விலக வேண்டும். அரசாங்கம் பொறுப்பை ஏற்பது சம்பந்தமான பொறுப்பு எதிர்க்கட்சிக்கும் இருக்கின்றது. ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தை பொறுப்பேற்க நாங்கள் தயார்.

 

 

Tamilwin