மக்களுக்கு பயந்து தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

மக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது இல்லங்களை விட்டு வெளியேறி தற்காலிக குடியிருப்புகளுக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் மற்றும் அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் வீடுகளை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் அமைச்சர்கள் ஏற்கனவே தமது தனிப்பட்ட வீடுகள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஒருவர் தனது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீதியில் பயணிக்கும் போது பாதுகாப்பிற்காக அணி வகுத்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் தாங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது யாருக்கும் தெரியாத வகையில் தனி வாகனங்களை பயன்படுத்தி மறைந்து செல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் திறப்பு விழாக்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தினசரி கூட்டங்கள், மற்றும் இதர விழாக்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Malaimalar