உக்ரைனில் உருக்காலையில் இருந்து அனைத்து பொதுமக்களும் வெளியேற்றம்

ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து போய் உள்ளது. சில நாட்கள் முன்பு அந்த நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்தது.

மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர். சரண் அடைய ரஷியா விடுத்த உத்தரவை உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ஆலையை சுற்றி வளைத்த ரஷிய படைகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.

அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கி இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஷியாவை உக்ரைன் மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தின. இதையடுத்து ஆலையில் குழந்தைகள் உள்பட பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்தது.

ஐ.நா.சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையை ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கின. உருக்காலையில் இருந்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் மரியுபோல் நகரில் ரஷிய படையால் முற்றுகையிடப்பட்டுள்ள உருக்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து பொதுமக்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதனை ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியது. கடைசியாக வெளியிடப்பட்ட வீடியோவில் உருக்காலையின் சுரங்கங்கள் மற்றும் பதுங்கு குழிகளில் சுமார் 200 பொதுமக்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுகி கூறும்போது, “உருக்காலையில் இருந்து அனைத்து பொதுமக்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஜனாதிபதியின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது. மரியுபோலில் மனிதாபிமான பணி முடிவடைந்தது” என்று தெரிவித்தார்.

 

 

Malaimalar