திறமைக்கான அங்கீகாரம் இனவாதமின்றி வரவேண்டும்

இராகவன் கருப்பையா – ஒரு காலக்கட்டத்தில் மலேசிய விளையாட்டுத் துறையில், குறிப்பாக ஒட்டப்பந்தைய போட்டிகளில் நம் இன இளைஞர்கள் கொடி கட்டிப் பறந்தது நாடறிந்த உண்மை.

ஆனால் அதுபோன்ற நிலை இப்போது இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றுதான். இக்குறைபாட்டுக்குக் காரணம் தற்போதைய இளைஞர்களுக்கு திறமை இல்லை அல்லது அவர்கள் சோம்பேறிகள் என்று பொருள்படாது.

இளம் பிராயத்திலேயே, குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் காலத்தில் அவர்களுக்கு போதிய அளவு வாய்ப்புகள் அமைவதில்லை அல்லது பல்வேறு காரணங்களினால் அவர்களுடையத் திறமை முடக்கப்படுகிறது என்பதை மறுக்க இயலாது.

இன பேதம் எனும் அரக்கனிடம் சிக்கிக் கொண்டு கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் நியாயமாகக் கிடைக்காத நிலையில்தான் இன்னமும் நாம் தல்லாடிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய சூழலில் விளையாட்டுத் துறையிலும் நமக்கு இதே கதி தானா என்று குமுறும் அளவுக்கு அண்மையில் சில சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

கடந்த 1980ஆம் ஆண்டுகளில் ஓட்டப்பந்தையத் துறையில் நாட்டிற்கு பெருமை சேர்த்த சேம்சன் வெள்ளபோய், ஜோசஃபின் மேரி தம்பதியரின் புதல்வி ஷெரின் தமது பெற்றோரைப் போலவே சாதனை புரிந்து வருகிறார்.

அமெரிக்காவில் கல்வி பயிலும் அவர் ஒட்டப்பந்தையங்களில் சிறந்து விளங்குவதோடு 400 மீட்டர் பிரிவில் 16 ஆண்டுகால மலேசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.

இருந்த போதிலும் அவருடைய கல்வி மற்றும் இதர செலவுகளை சமாளிப்பதற்கு சேம்சன் தம்பதிகள் மிகவும் சிறமப்படுகின்றனர்.

அவருடைய சாதனைகள் குறித்து உலகலாவிய நிலையில் பேசப்பட்ட போதிலும் நிதிச் சுமையை சமாளிக்க உதவும் பொருட்டு நமது விளையாட்டுத்துறை அமைச்சு என்ன செய்தது என்று தெரியவில்லை.

பேரரசர் தம்பதியர் கூட அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சின் போக்கு மிகவும் வருந்தத்தக்க ஒன்றுதான்.

இந்நிலையில் நாட்டின் பிரபல தொழிலதிபர் வின்சன் டான் தமது தொண்டூழிய அமைப்பின் வழி தக்க சமயத்தில் உதவிக் கரம் நீட்டினார்.

அதே போல தனியார் கராத்தே சங்கமொன்றின் 9 பேர் கொண்ட ஒரு குழு அண்மையில் ஃப்ரான்ஸில் நடைபெற்ற அனைத்துலக கராத்தே போட்டிகளில் ஒரு தங்கம் உள்பட மொத்தம் 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இச்சங்கம் விளையாட்டுத் துறை அமைச்சில் பதிவு பெற்றுள்ள போதிலும் ப்ஃரான்ஸ் செல்வதற்கு போதிய பண வசதியில்லாமல் அவதிப்பட்டதாக கூறுகிறார் அச்சங்கத்தின் தலைவர் மீனலோச்சினி பத்மநாதன்.

நிதியுதவி செய்ய வாக்களித்த சிலர் கடைசி நேரத்தில் பின் வாங்கியதாகவும் மற்றும் சிலர் தங்களை அவமானப்படுத்தியதாகவும் அவர் வருத்தத்துடன் குறிப்பட்டார்.

விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்குக் கூட லசதியின்றி அவதிப்பட்ட அவர்களுக்கு தேவையான பணத்தை இங்குள்ள ஒரு சுற்றுப்பயண நிறுவனம் முன்கூட்டியே செலுத்தி உதவியிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு பரிதாபகரமான சூழலிலும் அனைத்துலக சாதனை புரிந்துள்ள அக்குழுவினரின் வெற்றி குறித்து விளையாட்டுத் துறை  அமைச்சைச் சேர்ந்த யாரும் இதுவரையில் வாய் திறக்கவில்லை.

மற்றொரு உதாரணம் பனிச்சறுக்கு வீராங்கனை ஸ்ரீ அபிராமியின் அவல நிலை. அனைத்துலக ரீதியில் வெற்றிப் பதக்கங்களை குவித்துவரும் அவர் வட கிழக்கு ஐரோப்பாவில் உள்ள லட்வியாவில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

நிதிச் சுமையை சமாளிக்க இயலாமல் அவருடையத் தந்தை சந்திரன் தனது வீட்டையும் கூட விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இப்படியாக நிறைய பேர் திறமையிருந்தும் அரசாங்க ஆதரவில்லாமல் அவதிப்படுவது மிகவும் வேதனைக்குறிய ஒன்றாகும்.

விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இருந்தும் கூட நம் இனத்தைச் சேர்ந்த சாதனையாளர்கள் இப்படி அல்லோகலப்படுவதற்கு காரணம் அமைச்சின் கவனக்குறைவா, அலட்சியப் போக்கா, இன பாகுபாடா?