இலங்கை தமிழர் நலனுக்காக யாசகம் எடுத்து கலெக்டரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

 

இந்தியா சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் சார்பில் அரிசி, பால் பாக்கெட்டுகள், மளிகை, மருந்து பொருட்கள் ஆகியவை இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும் இலங்கை தமிழர் நலனுக்காக தன்னார்வலர்கள் தமிழக முதல்அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

 

இதனிடையே திண்டுக்கல்லை சேர்ந்த 70 வயது முதியவர் பாண்டி என்பவர் தான் யாசகம் பெற்ற ரூ.10ஆயிரம் பணத்தை இலங்கை தமிழர் நலனுக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட கலெக்டர் விசாகனிடம் இன்று வழங்கினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

 

நான் திண்டுக்கல் பஸ்நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது தினசரி தேவைக்கு போக மீதி பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்தேன். தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்து மனம் வருந்தினேன். என்னால் முடிந்த சிறிய உதவியாக நான் சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை இன்று மாவட்ட கலெக்டரிடம் வழங்கினேன்.

 

இது எனக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது என்றார். யாகசர் தான் சேமிப்பு பணத்தை மாவட்ட கலெக்டரிடம் இலங்கை தமிழருக்காக வழங்கிய சம்பவம் சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

 

 

Malaimalar