தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சரிந்தது- சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது

தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு 50க்கும் கீழ் குறைந்து இருக்கிறது. நேற்று தமிழகத்தில் ஒரு நாள் நோய் பாதிப்பு 30 ஆக பதிவானது.

அனைத்து மாவட்டங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு முற்றிலும் சரிந்துள்ளது. 31 மாவட்டங்களில் நோய் தொற்று இல்லை. சென்னையை தவிர்த்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், திருச்சியில் ஒற்றை இலக்கில் பாதிப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்பு சரிந்து வருவது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் சென்னையிலும் கொரோனா பாதிப்பு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இது 20-க்கும் கீழ் சரிந்து இருக்கிறது. நேற்று மட்டும் புதிதாக 16 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தற்போது 199 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதில் அடையாறு, தேனாம்பேட்டை மண்டலங்களை தவிர்த்து மற்ற அனைத்து மண்டலங்களிலும் குறைந்த அளவில் நோய் பாதிப்பு உள்ளது.

திருவொற்றியூர், மணலி நோய் தொற்று இல்லாத மண்டலங்களாக மீண்டும் மாறி உள்ளன. சென்னையில் மண்டலம் வாரியாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் விபரம் வருமாறு:-

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆங்காங்கே சில இடங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்பு வந்தது.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது சுமார் 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் நோய் தடுப்பு பணியில் இருந்தனர். இதன் பின்னர் 6 ஆயிரமாக குறைந்தது. தற்போது 200 நர்சுகள், 160 டாக்டர்கள் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெரும்பாலான இடங்களில் நோய் தடுப்பு மையங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது ஆம்புலன்சு சேவை, கட்டுப்பாட்டு மைய பணிகள், நோயாளிகளை சிகிச்சை மையங்களில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் இல்லாததால் கொரோனா பராமரிப்பு செலவுகள் குறைந்துள்ளன. தடுப்பூசி முகாம்களை மட்டும் தீவிரப்படுத்தி உள்ளோம்.

இதேநிலை நீடித்தால் நகரில் கொரோனா இல்லாத நிலை ஏற்படும். எனினும் கொரோனா நோய் தொற்று பரவலை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

Malaimalar