பேரெழுச்சிக்கு தயாரானது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும், அனைத்து உறவுகளையும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான லியோ அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, “இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும் பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவணிகள் இன்று மாங்குளத்தில் ஒன்றிணைந்து பரந்தன் ஊடாக வள்ளிபுனத்தை வந்தடைந்து, கடந்த 2006 ஆம் ஆண்டு வள்ளிபுனம் பகுதியில் விமானக் குண்டுவீச்சில் பலியாகிய மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியை வந்து பேரணி நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு நிறைவடைந்த குறித்த நடைபவனி ஆனது நாளை காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமாகி நாளை பத்து முப்பதுக்கு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நாளைய நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தருகின்றவர்கள் காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு சந்தியிலே வருகைதந்து அந்தப் பேரணியில் இணைந்து கொள்ளுமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

Tamilwin