மோசமான நிலையில் அரசாங்கமும் எதிரணியும்

இராகவன் கருப்பையா – நாட்டின் தற்போதைய அரசாங்கம் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வரலாறுக் காணாத அளவுக்கு மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இருந்த போதிலும் இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தயாராயில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

வழக்கமாக ஒரு ஜனநாயக நாட்டில், நடப்பு அரசாங்கம் எப்போது வலுவிழந்த நிற்கும், நிலை தடுமாறி ஆட்டம் காணும், போன்ற சூழ்நிலைகளுக்காக  எதிர்க்கட்சிகள் தவமாய் தவமிருக்கும். ஆனால் நம் நாட்டில் தற்போதைய நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஆளும் கூட்டணி, ஆட்சியைத் தங்கத்தட்டில் வைத்துக் கொடுத்தால் கூட அதனை ஏற்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் தயாராய் இல்லை என்றே தெரிகிறது.

இதனை நன்கு அறிந்துள்ள சில முக்கிய அம்னோ தலைவர்கள், ‘நாடு எக்கேடு கெட்டால்தான் என்ன, தேர்தல் நடந்தால் வெற்றி உறுதி’ எனும் திடமான நம்பிக்கையில் பொதுத் தேர்தலுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.

அம்னோவின் துணைத்தலைவர் முஹமட் ஹசான் அண்மையில் வெளிப்படையாகவே இது குறித்தும் கருத்துரைத்தார். அதாவது எதிர்க்கட்சியினர் ஒற்றுமையின்றி சிதறிக்கிடக்கின்றனர், அவர்களை எளிதில் தோற்கடிப்பதற்கு இதுதான் தருணம் என்று அவர் ஒழிவு மறைவின்றி குறிப்பிட்டார்.

எண்ணற்ற ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டு தவிக்கும் சில அம்னோ தலைவர்கள் அடுத்த ஓரிரு மாதங்களிலேயே 15ஆவது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனத் துடியாய்த் துடிப்பது ஏன் என்று சிறு பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும். அந்தக் குறிக்கோளை அடைவதற்கு எவ்வாரான நெருக்குதல்களைப்  பிரதமர் சப்ரிக்கு அவர்கள் கொடுக்கின்றனர் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அதற்கெல்லாம் அடிபணியாமல் மிகவும் லாவகமாக சப்ரி தனது காய்களை நகர்த்தி வருகிறார். ‘தேர்தலுக்குப் பிறகு பாரிசான் ஆட்சியமைத்தால் நீங்கள்தான் தொடர்ந்து பிரதமராக இருப்பீர்கள்’ என அம்னோ தலைமைத்துவம் கூறியுள்ள போதிலும். சப்ரி மட்டுமின்றி ஒட்டு மொத்த மக்களும் அந்த வாக்குறுதியை நம்ப தயாராய் இல்லை, அதனை பொருட்படுத்தவும் இல்லை.

எனினும் இதுவரையில் பதவியிலிருந்த பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமான ஒருவர் என்று கருதப்படும் சப்ரி எவ்வளவு நாள்களுக்குத் தாக்குப் பிடிப்பார் என்றும் தெரியவில்லை. அம்னோ தலைமைத்துவத்தில் அவர் 3ஆவது நிலையில்தான் உள்ளார். இது அவருக்கு ஒரு பின்னடைவு என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உச்சத்தில் நிற்கும் போதிலும் அரசாங்கம் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல் பொதுத் தேர்தல் மீதே குறியாக இருப்பது மக்களின் சினத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இருந்த போதிலும் மக்களின் ஆதரவு தங்கள் பக்கம்தான் என அம்னோ தலைமைத்துவம் உறுதியாக நம்புவதால் மிக மோசமாக உள்ள பொருளாதார நிலையைப் பற்றியும் அதனால் மக்கள் படும் அவதி குறித்தும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை.

இந்நிலையில் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள இயலாமல் எதிர்க்கட்சிகள் இன்னமும் சின்னாபின்னமாக்க கிடக்கின்றன. தேர்தலுக்கிடையில் அவர்கள் ஐக்கியம் காணும்  சாத்தியம் இருப்பதாகவும் தெரியவில்லை.

இந்த சூழ்நிலைக்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால் ‘தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பதைப் போல நிறையப் பேர் பிரதமர் பதவியில் அமர துடித்துக் கொண்டிருப்பதுதான்.

காலங்காலமாகக் காத்துக் கிடக்கும் அன்வாரோடு, வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபி, ருசிகண்டப் பூனைகளாக அப்பதவி சுகத்தை மீண்டும் அனுபவிக்கத் துடிக்கும் மகாதீர் மற்றும் முஹிடினும் ஆளுக்கு ஆள் கொடி பிடித்து நிற்கின்றனர். இப்படிப்பட்டச் சூழ்நிலையில் எப்படிதான் ஒற்றுமைப் பிறக்கும்?

அது ஒருபுறமிருக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பக்காத்தானுக்கு துரோகமிழைத்து ஆட்சியைக் கவிழ்த்த பெர்சத்துவையும் அரசியல் தவளைகளான அஸ்மின், சைஃபுடின்  போன்றோரையும் எதிரணியினர் ஏற்கமாட்டார்கள். அப்படியே அவர்கள் பக்காத்தான் கூட்டணியில்  இணைந்தாலும் பொது மக்கள் அவர்களை மன்னிக்கமாட்டார்கள். எனவே அவர்களை உள்ளே கொண்டு வருவதில் எவ்விதப் பயனும் இருக்காது. மாறாக அந்நடவடிக்கை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

வெறும் 4 தொகுதிகளை மட்டுமே வைத்துக் கொண்டு பேரம் பேசும்  மகாதீரையும் மக்கள் மன்னிக்கக் கூடிய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பலாம். கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவருடைய சாயம் வெளுத்ததை யாரும் இன்னும் மறக்கவில்லை. அவருடைய பெஜுவாங் கட்சி, தேர்தலுக்குப் பிறகு அஸ்தமனமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பக்காத்தான் தரப்பில் பலமாக இருப்பது ஜ.செ.க.வும் அமானாவும் மட்டும்தான். அமானா சிறிய கட்சியாக இருந்தாலும் ஜ.செ.க.வைப் போல ஒற்றுமையாக இருக்கிறார்கள். பி.கே.ஆர். கட்சியில் அவ்வப்போதுத் தோன்றி மறையும் உட்பூசல்களுக்கு  அன்வாரால் தீர்வுகாண இயலவில்லை.

ஊழல் விவகாரங்களில் ஊறிக்கிடக்கும் அக்கூட்டணி ஒரு புறம், ‘நாயும் பூனையுமாக’ எவ்வகையிலும் ஒன்றிணைய முடியாமல் பரிதவிக்கும் எதிரணிகள் மறுபுறம்.

இப்படிப்பட்ட ஒரு இரண்டும் கெட்டான் சூழலில் நல்லாட்சி வழங்குவதற்கு உருப்படியான ஒரு அரசியல் கட்சியோ கூட்டணியோ இல்லாத நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவதியுறும்  மக்களின் பாடுதான் திண்டாட்டம்!