கொரோனா பரவல் அதிகரிப்பு- சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரம்

முகக்கவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் ‘நோ மாஸ்க், நோ எண்ட்ரி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தமிழகத்தின் மொத்த பாதிப்பு 22 ஆக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து மெல்ல அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு பரவியது. 3 மாதத்திற்கு பிறகு நேற்று உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் ‘நோ மாஸ்க், நோ எண்ட்ரி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. கண்டிப்பாக பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களை நிறுத்தி கொரோனா வைரஸ் விதிகளை சுட்டி காட்டுகின்றனர். முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். விமான பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. கொரோனா பரிசோதனையும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை சுகாதாரத்துறையினர் பார்த்து முகவரி, போன் எண்களை குறித்து கொண்டு பயணிகளை வெளியே அனுப்புகின்றனர். கொரோனா முதல் அலை பாதிப்பின்போது விமான பயணிகள் தவறான செல்போன் எண்களை கொடுத்து சென்றதால் முடிவில் ‘பாசிட்டிவ்’ வந்த பயணிகளை தொடர்பு கொண்டபோது தவறான எண் என தெரியவந்தது.

15 ஆயிரம் பயணிகள் தவறான தகவல் கொடுத்ததால் அவர்களை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் பாஸ்போர்ட், ஆதார் கார்டுகளை அதிகாரிகளே ஆய்வு செய்து எண்களை குறித்து வைக்கின்றனர்.

 

Malaimalar