தடுமாறினாலும், தடம் மாறாமல் மஇகா செயல்படுமா!

இராகவன் கருப்பையா – அடுத்த பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதால் இதர கட்சிகளைப் போல ம.இ.கா.வும் அதித் தீவிரமாகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பது நன்றாகவேத் தெரிகிறது.

அதிகாரப்பூர்வமாக, உறுதியாக, தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்ற போதிலும் திரைமறைவில் நடக்கும் ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பலத் தொகுதிகளில் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருப்பதை மக்கள் கவனிக்காமல் இல்லை.

ம.இ.கா.வின் தற்போதைய இந்த உற்சாகத்திற்கு மூலக்காரணம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் தலைமைத்துவம் செய்த துணிச்சலான, தீர்க்கமான ஒரு முடிவுதான்.

பாரிசானா பெரிக்காத்தானா என்று முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட ம.இ.கா. சற்று தடுமாறிப் போனது ஏதோ உண்மைதான்.

இருந்த போதிலும் ‘எக்காரணத்தைக் கொண்டும் பாரிசானை விட்டு விலகமாட்டோம்’ என அதன் தலைவர் விக்னேஸ்வரன் செய்த உறுதியான அந்த முடிவினால்தான் அக்கட்சி கொஞ்சமாவது இப்போது தலை தூக்கி நிற்கிறது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கட்சித் தேர்தலுக்குப் பிறகு அதன் துணைத் தலைவர் சரவணன் அம்முடிவை மறு உறுதிப்படுத்தினார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதன் முக்கியத் தலைவர்கள் சிலர் பெர்சத்துவிற்கு தவளைப் போலத் தாவினர்.

அக்கட்சி இழுத்து மூடப்பட வேண்டும் என அப்போதையப் பிரதமர் மகாதீர் சற்றுத் திமிராகப் பேசும் அளவுக்கு பரிதாபகரமாக அது மேலும் வலுவிழந்துப் போனது.

இந்நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பெர்சத்து தலைவர் முஹிடின், பக்காத்தான் ஆட்சியைக் கவிழ்த்து பிரதமரான விசயம் எல்லாம் வரலாறு.

இத்தகைய சூழலில் தனது ஆண்டுக் கூட்டத்திற்கு தலைமையேற்க பாரம்பரியத்தைப் பின்பற்றி பாரிசான் தலைவர் அஹ்மட் ஹாஹிட்டை அழைப்பதா பிரதமர் என்ற வகையில் முஹிடினை அழைப்பதா என்றக் குழப்பத்தில் ம.இ.கா. கொஞ்சம் தடுமாறியது.

அப்படிப்பட்ட சிக்கல்களை எல்லாம் தாண்டி, ‘பாரிசானை விட்டு ஒருப்போதும் விலகமாட்டோம்’ என்ற அதன் விவேகமான முடிவு இப்போது கனிகளைக் கொடுக்கின்றது. ஏனெனில் மலாக்கா, ஜொகூர், ஆகிய இரு மாநில இடைத் தேர்தல்களிலும் பாரிசான் மகத்தான வெற்றிப் பெற்று பெர்சத்துவை கொசுப் போல் நசுக்கியது.

தொகுதி வாக்காளர்களுக்கு துரோகமிழைத்து சுயநல வேட்கையில் பெர்சத்துவிற்குத் தாவிய அரசியல் தவளைகள் இப்போது எந்தப்பக்கம் தாவினால் ஆதாயம் கிட்டும் எனும் குழப்பத்தில் தடுமாறி நிற்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே அணிமாறாததால் ம.இ.கா.வின் தலை தப்பியது ‘தம்பிரான் புண்ணியம்’ என்றுக் கூடச் சொல்லலாம். ஏனெனில் ஒரு காலத்தில் பாரிசானின் உறுப்புக் கட்சியாக நாட்டின் அரசியலில் கொடி கட்டிப் பறந்த கெராக்கான் கட்சியின் நிலை இப்போது ‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டக் கதை’யாக உள்ளது. ஆர்வக் கோளாறில் பெரிக்காத்தானில் இணைந்த அக்கட்சி இப்போது இருக்கும் இடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.

மக்கள் மத்தியில் அம்னோவின் பலம் தற்போது ஓங்கியிருப்பதால் ‘பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்’ எனும் நிலைப்பாட்டில் எதர்வரும் தேர்தலில் ம.இ.கா.வும் சில தொகுதிகளை மீட்டெடுக்க வாய்ப்பிருக்கிறது.

கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியர்களின் நம்பிக்கையை இழந்து கிட்டதட்ட முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்ட அக்கட்சிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்க வல்ல ஆத்தகைய வெற்றிகள் அவசியம்.

அதைவிட முக்கியம் இந்நாட்டு இந்தியர்களின் நலன்களை பேணிக்காப்பதற்கான அதன் கடப்பாடு. கடந்த காலங்களைப் போல சமுதாயப் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, வெறும் வெற்றுப் பேச்சால் காலத்தைக் கடத்தி பதவி சுகங்களை அனுபவித்தால் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற நிலைதான் மீண்டெழும்.

உதாரணத்திற்கு, கடந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் பள்ளிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன. வேறொருப் பிரிவில் பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்தாக சரவணன் கூறினார். அது பற்றி பிறகு முழு விவரமும் தெரியவில்லை.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் மழைத்தூறல் போன்ற ஒதுக்கீடுதான் என்பது எல்லாருக்கும் தெரியும். அது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கருத்துரைத்த விக்னேஸ்வரன், மதுபானம் மற்றும் சூது போன்றவற்றின் வரிப்பணத்தை அரசாங்கத்திடம் கோரப் போவதாகக் கூறினார். அப்படி செய்தாரா, அரசாங்கம் அதற்கு என்ன சொன்னது, போன்ற விவரங்களைக் காணவில்லை.

தடுப்புகாவல் நிலையங்களில் அதிகமானோர் மரணமடைவது குறித்து பிரதமரிடம் பேசப்போவதாக சரவணன் சூளுரைத்தார். அப்படி பேசியிருந்தால் அதற்கு பிரதமர் என்ன சொன்னார் என்றும் தெரியவில்லை.

இப்படியாக நிறைய விசயங்கள் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளன என்பது நம் சமுதாயத்திற்கு ஏமாற்றமளிக்கும் ஒன்றுதான்.

தலைமையகத்திற்கு உதவி நாடிச் செல்வோர் உதாசினப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு திருப்பியனுப்பட்ட கதைகள் எல்லாம் ஒன்றா இரண்டா? இத்தகைய குறைபாடுகளும் கலையப்பட வேண்டும்.

ஆக எத்தனைத் தொகுதிகளில் ம.இ.கா. வெற்றிபெறும் எத்தனை அமைச்சர், துணையமைச்சர் மற்றும் ஆட்சிக்குழு பதவிகள் கிடைக்கும் என்பதெல்லாம் மக்களுக்கு முக்கியமல்ல. அந்த வெற்றிகளை ஆயுதமாகப் பயன்படுத்தி நலிந்துக் கிடக்கும் தமது சமுதாயத்தை தூக்கிவிட எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.