தமிழை வளர்க்க பாடுபடும் உயர் கல்வி மாணவர்கள்!

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் தமிழுக்கும் தமிழ் பள்ளிகளுக்கும் பலக் கோணங்களில் இருந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உயர் கல்வி பயிலும் சில இந்திய மாணவர்களின் முன்னெடுப்பு நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

மலேசியாவில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கும் என்பதற்கு அச்சாணியாக, தீவிர மொழிப் பற்றுடைய இத்தகைய இளம் மாணவர்களின் செயல்பாடுகள் நம்பிக்கையூட்டுவது மட்டுமின்றி மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பாக ஒரு சில பல்கலைக் கழகங்களில் இயங்கும் தமிழ் மொழிக் கழகங்கள், மொழி வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உண்மையிலேயே அளப்பறியது என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இயக்கம்தான் குமாரி சிவநேஸ்வரி மோகன் தலைமையில் இயங்கும் மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத் தமிழ் மொழிக் கழகம்.

பல்கலைக் கழகங்களுக்கு வெளியே, தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் சில சங்கங்களுக்கும் அரசு சாரா இயக்கங்களுக்கும் சவால்விடும் வண்ணமாக இந்தத் துடிப்புமிக்க மாணவர்கள் செயலாற்றுகின்றனர்.

அக்கழகத்தின் துணைத் தலைவி குமாரி இலோவிஷா தலைமையிலான ஏற்பாட்டுக் குழு எதிர்வரும் ஜூலை மாதத்தில் ‘தீந்தமிழ் திரள் 2.0’ எனும் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தவுள்ளது. உயர் கல்வி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கவிதை ஒப்புவிக்கும் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் போற்றப்பட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், அப்பல்கலைக் கழகத்தில் பாரம்பரிய ஆய்வியல் துறையில் 2ஆம் ஆண்டு பட்டப் படிப்பை மேற்கொண்டுள்ள இலோவிஷா தமிழ் பள்ளிக் கூடம் சென்றதில்லை. சுயமாகவே தமிழைக் கற்றுக் கொண்ட ஒரு மலாய் பள்ளி மாணவியான அவர், இது போன்ற போட்டிகளின் வழி தமிழ் மொழியை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் செல்ல தமது ஏற்பாட்டுக் குழு பாடுபடுவதாகக் கூறினார்.

குறிப்பாக கிளந்தான் போன்ற மாநிலத்தில் நம் தமிழ் மொழியை நிலைநாட்டி, அங்கீகரிக்கவே இந்தத் ‘தீந்தமிழ் திரள்’ 2ஆவது முறையாக நடத்தப்படுகிறது என்றார் அவர்.

அது மட்டுமின்றி இப்போடிகளின் வழி உயர் கல்வி மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதான பற்றையும் ஆர்வத்தையும் மேம்படுத்தத் தாங்கள் எண்ணியுள்ளதாக அவர் மேலும் விவரித்தார்.

கிளந்தான் மாநிலத்தில் இருக்கும் ஒரே தமிழ் பள்ளியான பாசிர் காஜா தமிழ் பள்ளியில் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கு நாடளாவிய நிலையில் உள்ள உயர் கல்வி மாணவர்களின் பங்கேற்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோலக்கிராயில் உள்ள அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை நலிவடைந்து வருவதால் அதனை விளம்பரப்படுத்தி எதிர்வரும் காலங்களில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாகவும் இது அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

போட்டிகளுக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் எதிர்வரும் ஜூன் 26ஆம் தேதி. மேல் விவரங்களுக்கு, இலோவிஷா: 0165654680.