அரசியல் அவலத்தின் எல்லையில் மலேசியர்கள் – கி. சீலதாஸ்

மலேசியர்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளனர்.

அளவற்ற ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதில் சளைக்காதவர்கள்.

நீதித்துறையை மதிக்க மறுக்கும் சக்திகள், சட்ட அமலாக்கத்தைத் துச்சமென நினைப்போர், சட்டத்தைப் பிறர் பின்பற்ற வேண்டும் ஆனால், தாம் பின்பற்றாவிட்டால் குற்றமாகாது என இறுமாப்புடன் நடந்து கொள்பவர்கள்.

அச்சுறுத்தும் கலாச்சாரத்தைப் பயன்படுத்த தயங்காதவர்கள்.இன, சமய, மொழி பிரச்சினைகளை அரசியலாக்கி ஆதாயம் காண முற்படுவோர்,

இப்படி போன்றவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமா?

இன்றைய அரசியல் பார்வையாளர்களின் கருத்துக்களை அலசிப்பார்த்தால் “ஆட்சி நிரந்தரம்” என்ற அரசியல் கோட்பாட்டை முன்வைத்து இதுகாறும் நாட்டில் ஊழல் கலாச்சாரம் வேரூன்றி நாட்டைப் பாழ்நிலைக்குக் கொண்டுவந்த புண்ணியவான்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதை ஆதரிக்கும் சக்திகள் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வி எழும்புகிறது.

அரசியல் ஆருடம் என்ற போர்வையின்கீழ் இவர்கள் ஊழல் கலாச்சாரத்துக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார்கள் என்றால் தவறு அல்ல.

இந்தக் காலகட்டத்தில் மலேசியர்கள் பல குழப்பங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது  வெள்ளிடைமலை.

பொருளாதாரச் சீர்கேடு, அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, குற்றச்செயல்கள் உயர்வதில் கட்டுப்பாட்டைக் காணோம். நாட்டில் சட்ட ஒழுங்கு இருக்கிறதா என்றால் மக்கள் நடந்துகொள்ளும் முறையிலிருந்து சில உண்மைகளைய் தெரிந்து கொள்ளலாம்.

இது சிரமமாக இருக்கிறது என்றால் வாகனங்கள் பயன்படுத்தப்படும் முறையைக் கவனியுங்கள். உண்மை புலப்படும். ஏகப்பட்ட குழப்பங்கள் மலேசியர்களை உறுத்துகிறது என்றால் அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியுமா? விதிமுறைகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா? கிடையாது. முரட்டுத்தனம் மேலோங்கி காணப்படுகிறது.

ஆட்சியில் இருப்போருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தால், அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றில், எவ்வளவு நியாயம் இருந்தாலும் அது முக்கியமல்ல. சமுதாயத்தில் குழப்பம், அமைதியின்மை ஏற்படுத்தும் செயல்கள், பேச்சுகள், கருத்துக்கள் என்ற பொய்யான காரணத்தைக் காட்டி உண்மையைச் சொன்னவர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

ஒரு காலத்தில் அரசின் தவறான போக்கை, நடவடிக்கைகளைக் குறை கூறினால், அவ்வாறு குறை கூறுவோரைக் கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்திவிடுவது அரசின் நிர்வாக மரபாக இருந்தது.

உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புது சட்டம் இயற்றப்பட்டது, இதன் கொடூரம் கடந்தகால சட்டத்தை விஞ்சுகிறது என்றால் சமூக விரோதி என்று குற்றம் சாட்டப்படலாம்.

இன்று மலேசியாவில் வளர்ந்துவரும் குழப்பங்கள் மக்களைத் துன்புறுத்துகின்றன. மலேசியாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாகிவிட்டது  என்று கூட சொல்லலாம்.

கோவிட்-19 பரவியதன் வழி நாட்டின் உற்பத்தி, பொருளாதாரம், அரசியல் யாவும்  பாதிப்படைந்தது உண்மை. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. எனினும், இந்த நாட்டில் என்ன நடக்கிறது?

அரசியல் நாடகம்!

அதில்தான் கவனம் எல்லாம். அதிகாரத்தைக் கவருவதிலும், தற்காத்துக் கொள்வதிலும்தான் அக்கறை எல்லாம். இந்த லட்சணத்தில் ஆளும் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகள் கூட ஒற்றுமையாகச் செயல்பட முடியாமல் தடுமாறுவதைக் காண்கிறோம்.

பதவி ஆசை, அதிகாரத்தைக் கைபற்ற வேண்டும் என்கின்ற வேட்கை, வெறி, நாட்டு நலனிலும், மக்களின் நலனிலும் இம்மியளவும் கரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்பொழுது நம் நாட்டில் நடக்கும் அரசியல் கூத்தானது கிரேக்க காவியங்களில் சித்தரிக்கப்பட்ட சூழ்நிலைகள் நினைவுக்கு வருகின்றன. அரசியலில் துரோகச் செயல், துரோக மனப்பான்மை தொன்றுதொட்டு வழக்கில் இருந்தது என்பதற்குச் சான்றாக விளங்குவது ரோம் நாட்டின் ஜூலியஸ் சீசர்.

புரூட்டஸ் சீசரைக் கொன்றான். மார்க் அந்தோனி புரூட்டஸைக் கொன்றான்.

இந்த அரசியல் நாடகம் இன்றளவும் கையாளப்படுவதை நாம் காண்கிறோம்.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானியர்களை இந்தப் பிரதேசத்தில் இருந்து துரத்துவதற்கு மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது. அந்தத் தேவை முடிந்ததும், கம்யூனிஸ்டுகளை ஓரங்கட்டியது மட்டுமல்ல பயங்கரவாத இயக்கம் என்ற அடைமொழியைச் சாற்றியது பிரிட்டன்.

சிங்கையில் மக்கள் செயல் கட்சி தோன்றி செயல்பட ஆரம்பித்தபோது அது இடதுசாரி அரசியல் கட்சியாகத் தோற்றமளித்தது. ஜேம்ஸ் புதுச்சேரி, வுட்ஹல், தேவன் நாயர், லிம் சின் சியோங் ஆகியோர் லீ குவான் யூவுக்குப் பக்கப் பலமாக இருந்தனர். மக்கள் செயல் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

சிறையில் இருந்த லிம் சின் சியோங், ஜேம்ஸ், வுட்ஹல், தேவன் நாயர் ஆகியோர் விடுவிக்கப்பட்டால்தான் அரசு பதவியை ஏற்போம் என்றார் லீ குவான் யூ. விடுவிக்கப்பட்டார்கள். ஆட்சி நிர்வாகத்தில் பங்குபெற்றனர். மலேசியா அமைக்கப்படும் நேரத்தில் லீ குவான் யூ அதற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

அவருடைய அரசியல் சகாக்களான ஜேம்ஸ், வுட்ஹல், லிம் சின் சியோங் மலேசியா அமைப்பை எதிர்த்தனர். தேவன் நாயரைத் தவிர. விளைவு, அவர்கள் யாவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து நீக்கப்பட்டனர். அன்றைய இந்த அரசியல் சாணக்கியம் இன்றும் கையாளப்படுகிறது.

இதை எல்லாம் ஆய்ந்துப் பார்க்கும்போது சமீப காலத்தில் இந்த நாட்டில் நடந்த அரசியல் நடவடிக்கைகள் துரோகக் கலாச்சாரம் புதுமையான நடவடிக்கை அல்ல என்பது தெளிவாகிறது. துரோகத்தைக் கைவிட்டால் அரசியலில் நீண்ட காலம் நீடிக்க இயலாது என்பது உண்மையே.

இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களைக் கண்ணுறும்போது கடந்த அறுபது ஆண்டு ஆட்சிகாலத்தில் முறைகேடான ஊழல் புரிந்தவர்களின் அடையாளம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இது உண்மை என்றால் நாட்டைச் சுரண்டுவதில் இருந்த பேராசை மக்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் மரித்துவிட்டதைத்தான் காண்கிறோம்.

நாடு அவலநிலையில் இருப்பதை அரசு உணர்ந்ததோ இல்லையோ மக்களுக்குத் தங்களின் அவலத்தை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. மக்கள்  தங்களின் குறைகளை வெளிப்படுத்தினால் அது தவறு என்று சொல்வது முறையல்லவே.

மக்களின் பிரதிநிதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தவறியபோது, வாக்குறுதிகளை நிறைவேற்ற மறக்கும்போது, மறுக்கும்போது; மக்கள் தங்களின் குறையை, தேவையை வெளிப்படுத்த கையாளும் முறை கசப்பானதாக இருக்கலாம்.

குறிப்பாக ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவை ஏமாந்த, வெறுப்படைந்த மக்கள் கையாளும் ஜனநாயக ஆயுதம். அது தேவையில்லை. குற்றச்செயல் என்று சொல்வது அரசமைப்பு வழங்கியிருக்கும் உரிமைகளைப் பறிப்பதாகக் கருதப்படும்.

தேர்தலில் வெற்றி பெற மக்களின் வாக்குகள் வேண்டும். ஆனால், அவர்களின் வேதனை மலிந்த வாக்கு (பேச்சு) ஒலிக்கக்கூடாது; தடை செய்ய வேண்டும். இது என்ன நியாயம்? இப்படிப்பட்ட போக்கு நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாட்டை அவமதிப்பாகக் கருதினால் தவறாகாது. இது ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.