சுதந்திர தின கொண்டாட்டம்- வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டு கோள்

75வது சுதந்திர தின கொண்டாட்டம், பொது மக்களின் இயக்கமாக மாறி உள்ளது. மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் இன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட இயக்கம், பொது மக்களின் இயக்கமாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நம் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள நமது கணக்குகளின் சுயவிவரப் படமாக ஆகஸ்ட் 2 முதல் 15ந் தேதிவரை மூவர்ணக் கொடியை வைக்க வேண்டும்.

காமன்வெல்த் போட்டியில் டீம் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்று காலத்தில் மருத்துவப் பயன் உள்ள தாவரங்களின் ஆராய்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

இது ஒரு நல்ல ஆரம்பம். இந்த மாதம் மெய்நிகர் ஹெர்பேரியம் துவக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட தாவரங்கள் அல்லது தாவர பாகங்களின் தரவுத்தளம் இதில் உள்ளது, இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் மற்றும் தொடர்புடைய அறிவியல் தகவல்களும் இதில் கிடைக்கின்றன. இந்த மெய்நிகர் ஹெர்பேரியம் நமது தாவரவியல் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

-mm