ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு மாத கால அவகாசம்

இலங்கையை மீள கட்டியெழுப்ப அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகம் வருகை தரவிருக்கும் இந்த மாதத்தில் பிரச்சினைகளை உருவாக்குவது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேரர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையை மீள கட்டியெழுப்ப அதிபருக்கு இரண்டு மாத காலமாவது வழங்கப்பட வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியவில்லை என்றால் நாம் எமது கைக்குள் நாட்டை எடுக்க வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்ப சுற்றுலாத் துறையின் பங்கு மிகவும் முக்கியமாகும், எனவே இந்த இரண்டு மாதங்களுக்கு நாட்டில் சமாதானமான முறையில் ஆட்சியை கொண்டு செல்ல அதிபருக்கு இடமளிக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரவிருக்கும் இந்த மாதத்திலும் பிரச்சினைகளை உருவாக்குவது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.

நிறைவேற்று அதிபரின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் அதிகாரங்களுடன் சமப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்துக்குள் என்ன நடக்கும் என்பது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாடாளுமன்றத்துக்குள் இருக்கும் எண்ணிக்கையை வைத்தே எதிர்கால நாட்டு நிலைமை நிர்ணயிக்கப்படுகிறது.

நாட்டின் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை புதிய அதிபர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.

மே மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை விநியோகிக்க இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருளை சரியான விதத்தில் விநியோகித்திருந்தால் ஒக்டோபர் வரை போதுமானதாக இருந்து இருக்கும்.

எரிபொருள் வரிசைகளையும் மின் வெட்டையும் இல்லாதொழிக்க வேண்டும்

முதலில் எரிபொருள் வரிசைகளையும் மின் வெட்டையும் இல்லாதொழிக்க வேண்டும். இதனை இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்ய முடியும்.

நாட்டில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இங்கு பாவனையில் இருக்கும் எரிபொருள் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் எரிபொருள் வரிசைகளை தவிர்க்க முடியும். இவ்வாறான குறுகிய கால திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

 

-ibc