தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:- தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- நம் இந்திய திருநாட்டின் 76-வது சுதந்திர நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நியர் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற தருணத்தில், உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய வல்லரசாக, தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதனைக் கொண்டாடும் விதமாக பாரதப் பிரதமர் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ கொண்டாட்டங்களை அறிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் தேசியக் கொடிக்கும் பெருமை சேர்க்கும் விதமாக வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்ற ‘ஹர் கர் திரங்கா’ வை முன்வைத்தார்.

இந்த சுதந்திர நன்னாளில் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் அனைவரையும் போற்றுவோம். வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்றி நமது சுதந்திர உணர்வை, தேசப்பற்றை வெளிப்படுத்துவோம். “வாழிய பாரத மணித்திரு நாடு.!!!” ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- 1947-ல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.

அனைவரது இல்லங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதைப் பார்ப்பதில் பரவசம் ஏற்படுகிறது. இதன்மூலம், நாட்டு மக்களின் தேசபக்தி மேலோங்கி வருவது மனநிறைவை தருகிறது. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்தால் தான் அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும். தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 76-வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையில் இருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்:- சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, கவுரமான வாழ்க்கை உள்ளிட்ட மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை ஆகும்.

இத்தகைய சிறப்புமிக்க விடுதலையை இந்த நாடும், நாட்டு மக்களும் முழுமையாக அனுபவிக்க வேண்டும். என்றால், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்; அவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக் கொள்வோம். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- 75-வது சுதந்திர தின நன்னாளில் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றுவோம். வேற்றுமையில் ஒற்றுமை தான் நம்முடைய தனிச் சிறப்பு.

அதைப் பேணிக் காப்பது தான் நம்முடைய கடமை. இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் நலப் பணிகள் அமைந்து நல்லரசாக செயல்படும் இந்தியாவை வல்லரசாக மாற்ற உறுதியேற்போம். செயல்படுவோம், வெற்றி பெறுவோம். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:- இந்தியத் திருநாட்டின் விடுதலை திருநாள் நல் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது விடுதலை திருநாளின் பவள விழா ஆண்டு என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றது.

பல ஆயிரம் உயிர் தியாகத்தால் உயிர் பெற்ற சுதந்திரத்தை உன்னதமாய் பேணிக் காப்போம். இருப்போருக்கும் இல்லாதாருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு இல்லாத இந்தியாவை முழுமையாய் கட்டமைப்போம். உலக நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கருத்துரிமை, அரசியல் சாசன உரிமை போன்றவற்றைக் காத்து நிற்க இந்த விடுதலை திருநாளில் உறுதியேற்போம். தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம்:- ஆகஸ்டு 15 எவராலும் என்றும் மறந்துவிட முடியாது. மறந்து விடவும் கூடாது. காரணம், நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க எத்தனையோ தியாகிகள் தங்களின் இன்னுயிரை ஈந்தனர். சிறை வாசம், தடியடி என கோடான கோடி மக்கள் வதைப்பட்டனர். எனவே அவர்கள் செய்த தியாகங்கள் மறக்க முடியாது.

இதை அடுத்த தலைமுறைக்கும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அது நம் கடமையாகும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:- “வேற்றுமையில் ஒற்றுமை”, மதச்சார்பின்மை ஆகிய தார்மீக கொள்கைகளை பிரதானமாக ஏற்ற இந்தியா, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்திருப்பதை எண்ணி பார்க்கும்போது, பெரும் சவால்களை கடந்து, தன் சுய கட்டமைப்பால் உலகின் முன்னணி பொருளாதார நாடாக உயர்ந்திருப்பதற்கு ஒவ்வொரு குடிமக்களும் பெருமைகொள்ள வேண்டும். அதேசமயத்தில், இந்திய தேசத்தை வல்லரசு நாடாக மேலும் உயர்த்துவதற்கு நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் உறுதுணையாக செயல்பட வேண்டும் என இந்த இனிய சுதந்திர தினத்தில் அனைத்து இந்திய குடிமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்:- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசத்தின் இறையாண்மையை காப்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற கொள்கைக்கு ஏற்ப தேசிய அளவில் சிறப்பாக கொண்டாடிட மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று அனைத்து தரப்பினரும் நமது அலுவலகங்கள், வணிக வளாகங்கள், இல்லங்களிலும் தேசிய கொடியை 3 நாட்கள் ஏற்றி நமது ஒற்றுமையையும், இன்றைய இளைய தலைமுறைகளுக்கு சுதந்திரத்தை பற்றியும், அதற்காக போராடி உயிர் தியாகம் செய்த நம் முன்னோர்கள் பற்றியும் அவர்கள் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நாம் அனைவரும் தேசிய கொடியை கட்டாயம் ஏற்ற வேண்டும்.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தர பாண்டியன்:- இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அவரவர் வாழும் இல்லங்களிலும், அலுவலகங்களிலும் சுதந்திர இந்தியாவின் தேசியக்கொடியை ஏற்றி வணங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வருங்கால இந்தியா வளமானதாக வலிமையானதாக இருக்கட்டும்.

இந்தியா வல்லரசாகும் நேரம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணியை இந்தியர் ஒவ்வொருவரும் இன்றிலிருந்தே தொடங்குவோம். கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் யாதவ்:- இந்தியாவின் 75-வது சுதந்திர தின நிறைவு ஆண்டில் செழுமையான இந்தியாவை வளமான இளைஞர்களை பெற்று உலக நாடுகள் போற்றும் மாபெரும் நாடாக நம் இந்திய நாட்டை உருவெடுக்க வைப்போம் என்ற சபதத்துடன் இந்த சுதந்திர தினத்தில் ஒவ்வொரு இந்தியரும் செயல்படுவோம். மேலும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ், நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் ஆகியோரும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

-mm