பிரேஸர் மலையிலும் செழித்தோங்கும் தமிழ்!

இராகவன் கருப்பையா- சுமார்1,400 மீட்டர் உயரத்தில்,10கும் குறைவான இந்தியக் குடும்பங்களே வசிக்கும ஒரு பகுதியில் அதிகச் சிரத்தையெடுத்து தமிழுக்கு உரமூட்டி வருகிறார்கள் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க 7 தமிழாசிரியர்கள்.

பஹாங் மாநிலத்தின் ரவுப் மாவட்டத்தில் உள்ள ஃபிரேஸர் மலையில்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது.

கடந்த 1935ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று நம்பப்படும் அப்பள்ளியில் முதலாம் ஆண்டிலிருந்து 6ஆம் ஆண்டு வரையில் தற்போது மொத்தம் 24 பிள்ளைகள் பயில்கின்றனர்.

ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஃபிரேஸர் மலையைச் சேர்ந்தவர்கள் அல்ல. அருகிலுள்ள கோலக் குபு பாரு மற்றும் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவுடைய கெமாயான், காஜாங், செரம்பான் மற்றும் மலாக்கா போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் முறையான தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் தலைமையாசிரியர் பாலா.

பள்ளியின் மேலாளர் வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், அரசு சாரா இயக்கமொன்றின் ஆதரவோடு, பாதுகாவலருடன் கூடிய அந்த மாணவர் தங்கும் விடுதியை நிர்வகிக்கின்றன.

நாடு தழுவிய நிலையில் மாணவர் பற்றாக்குறையினால் பல தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மூடப்படக் கூடிய சாத்தியத்தை எதிர்நோக்கியுள்ளது நாம் அறிந்த ஒன்றே.

ஃபிரேஸர் மலை தமிழ் பள்ளிக்கும் அந்நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்குப் பாலாவும் அவருடைய 6 ஆசிரியர்களும் அதிகம் சிரத்தையெடுத்து மாணவர் சேர்க்கையில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அவ்வளாகத்தில் இருந்த ஒரு சீனப் பள்ளி, மாணவர் பற்றாக்குறையினால் அண்மையில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கிருக்கும் ஒரே தேசியப் பள்ளியிலும் சுமார் 50 மாணவர்கள்தான் உள்ளனர் என்று நம்பப்படுகிறது.

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் ஃபிரேஸர் மலை தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்ற போது மிகவும் குறைவான எண்ணிக்கையிலான மாணவர்களே அங்கு இருந்ததாகக் கூறும் பாலா, சன்னம் சன்னமாகப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து அவ்வெண்ணிகையை அதிகரித்துள்ளார்.

அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீபக் காலமாகக் கணிசமான அளவு குறைந்துவிட்டது. எனவே வெளி மாகாணங்களில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை முன்மாதிரியாகக் கொண்டுதான், தலைநகரில் இருந்து வடக்கே ஏறத்தாழ 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெர்லிங் தோட்டத் தமிழ் பள்ளியில் ‘குருகுலம்’ எனும் திட்டமொன்றைத் தொடக்கி வசதி குறைந்த மாணவர்களுக்குத் தங்கும் வசதியுடன் கூடிய கல்வி வழங்கப்படுகிறது.

கோல்ஃப், சுவர் பந்து(ஸ்குவாஷ்) மற்றும் வில்வித்தை(அம்பு எய்தல்) போன்ற விளையாட்டுகளில் நம் பிள்ளைகள் சிறந்து விளங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபாடு காட்ட அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறும் பாலா அதற்கான நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.

அண்மையில் அங்கு நடைபெற்ற, பறவைகளை அடையாளம் காணும் அனைத்துலகப் போட்டிகளில் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த அடைவு நிலையை எய்திச் சாதனை படைத்தனர்.

இடைநிலைப் பள்ளி மாணவர்களுடன் ஒரே பிரிவில் பங்கேற்ற அவர்கள் 2ஆவது 3ஆவது 4ஆவது இடங்களைக் கைப்பற்றி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்ததாகக் கூறும் பாலா, ‘ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்’ என்பதற்கு ஏற்பப் பல்வேறு துறைகளில் நம் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டில் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருந்த காலக் கட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த வேளையில் இயங்கலை வழியாக  வகுப்புகள் நடத்தப்பட்ட போது தனியாரின் ஆதரவோடு எல்லா மாணவர்களுக்கும் வரைபட்டிகை ஏற்பாடு செய்யப்பட்டு எவ்விதத் தடையுமின்றிப் பாடங்கள் போதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குன்றின் மேலிட்ட விளக்கைப் போல ஃபிரேஸர் மலையில் தமிழ் மொழி செழித்தோங்குவதற்கும் வசதி குறைந்த நம் பிள்ளைகளின் வாழ்வில் ஒளி வீசுவதற்கும் அயராது பாடுபடும் அந்த 7 ஆசிரியர்களின் அளப்பரிய சேவைகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது!