மகாபாரதம் முதல் மலேசியா வரை – நீதி வெற்றி பெற வேண்டும்

கி.சீலதாஸ் – நாம் எப்பொழுதும் வெற்றியை மட்டும்தான் விரும்புகிறோம், எதிர்பார்க்கிறோம். அது மனிதனின் இயல்பான குணம், மனிதனின் தனி பண்பாகும். தோல்வியை வெறுக்கிறோம். தோல்விதான் வெற்றிக்கு வித்திடுகிறது என வெற்றி பெற்றவர்கள் சொல்வார்கள்.

ஏனெனில், அவர்கள் தோல்வியைக் கடந்தவர்கள். ஒரு செயலில் இறங்கும்போது முடிவைத்தான் எண்ணுகிறோம். அதை அடையும் முறையை நாம் பொருட்படுத்துவதில்லை.

சில சமயங்களில் நமது முயற்சி வெற்றியைத் தரலாம். ஆனால், பெரும்பாலும் மனச்சாட்சியற்றவர்களின் பசப்பு மொழிகளால், பொய்யுரைகளால், நிறைவேற்றும் நோக்கமில்லாதவர்களின் உறுதிமொழிகளால் ஏமாற்றப்படுகிறோம்.

இத்தகையோரின் நேர்மையற்ற, கயமைத்தனத்துடன் தொடரும் நடவடிக்கைகளால் நாம் நமது உரிமைகளை, சுயமரியாதையை, சுதந்திரத்தை, சிந்திக்கும் ஆற்றலைப் பறிக்கொடுத்துவிட்டோம் என்றாலும் பிசகல்ல.

என் கால்களைச் சங்கிலியால் பிணைக்கலாம். ஆனாலும், இறைவனால் கூட என் சுதந்திர வேட்கையை முறிக்க முடியாது என்றான் எபிக்டெட்டஸ் கிரேக்கத்தின் தத்துவஞானி. இந்தியத் துணைக்கண்டத்தில் நம் முன்னோர்கள் கூட பல அரிய தத்துவங்களை வெளியிட்டுள்ளனர். நாம் சீண்டி கூட பார்ப்பதில்லை.

இவ்வாறு கருத்தாழமிக்க அறிவுரைகள் இருந்தபோதிலும் மக்கள் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் ஏமாற்றம் சிலருக்கு வெற்றியாக அமைந்துவிடுகிறது. அப்படிப்பட்ட வெற்றி தோல்வியில் சங்கமித்துவிடும் என்கிறார் ஃபிரெஞ்சு இலக்கியப் படைப்பாளர் சிமொன் டு புவா.

வெற்றி ஒரே கையுடையது. ஆனால், அமைதி இரு தரப்பினர்க்கும் வெற்றியை நல்குகிறது என்பது எமர்சனின் கருத்து. அரசியலை எடுத்துக்கொண்டால் அங்கே நேர்மைக்கும், நியாயத்துக்கும் இடம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, வெற்றியை எப்படி விளக்குவது? எது உண்மையான வெற்றி? எமர்சன் சொன்னது போல் அமைதியை, சமாதானத்தை – வெற்றியின் அடையாளமே சமாதானம் என்று பொருள்படுமா? பகை நாடுடன் சமாதானம் காண்பது விவேகமான போக்காக இருக்கலாம். ஆனால், நாம் காண விரும்பும் அமைதி, சமாதானம் நம்மிடையே, நம் நாட்டினுள், நம் சக சமுதாயத்தினருடன் எவ்வாறு அடைவது? புரிந்துணர்வு, நட்புறவு, பரந்த மனப்பான்மை நாடே ஒரு குடும்பம் என்று பறைசாற்றுவது எல்லாம் கேட்க இனிமையாக இருப்பினும் அவை உண்மையில் அமைதி சூழலை, புரிந்துணர்வை வளரவும், பலம் பெறவும் உதவுமா, உதவியதா என்பதே கேள்வி.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதில் கரிசனம் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், பாமர மக்களைக் கவரும் அலங்கார முழக்கங்களுக்கோ பஞ்சமில்லை.

இப்பொழுது நம் நாட்டில் ஒரு வகை போர் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது எப்படிப்பட்ட போர்? சிலர் ஒரு போரல்ல பலவகையான போர்கள் நடக்கின்றன என்று சொல்வோரும் உண்டு.

இனப்போர், மொழிப்போர், கலாச்சாரப்போர், பொருளாதாரப்போர், இனப் பாகுபாடு, சமயப் பாகுபாடு தொடர்பான போர்களையும் ஒதுக்கக்கூடாது என்பதும் வலியுறுத்தப்படுகிறது. இதை எல்லாம் கவனமாகப் பார்க்கும்போது இழந்த பொருளைப் பெறுவதில் வெற்றி காணும் முறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? நாகரிக காலத்தில் ஒருவர் தாம் இழந்த நிலத்தைத் திரும்பப் பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். சட்டத்தில் இது மீட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பரிகாரம் கிடைக்கும்.

நீதிமன்றத்தில் தூய்மையான, எதற்கும், எவர்க்கும் அஞ்சாத நீதி தேவதை இருக்கிறாள் என்ற நம்பிக்கை நம்மை அங்கே இட்டுச்செல்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால் அது நியாயமாகவோ, தவறான சாட்சியத்தால் வழி தவறுவது அல்லது சட்டத்தின் உண்மை பொருளைப் புரிந்துகொள்ள தவறுதல் போன்ற காரணங்களால் நீதி பிறழ்வது நடக்காத அதிசயம் அல்ல.

ஒவ்வொரு நிகழ்வையும், நிகழ்வுக்குக் காரணமாக இருந்தவர்களின் மனநிலையை ஆய்ந்துப் பார்க்கும்போது எது எப்படி நடந்தாலும் வெற்றியில்தான் குறியாக இருக்க வேண்டும் என்ற போக்கு ஏற்புடையதா? வெற்றி என்றால் எப்படிப்பட்ட வெற்றி? நியாயமான, ஏமாற்று வித்தைகள் இல்லாத வெற்றி அல்லவா உண்மையான வெற்றி!

மகாபாரதத்தின் ஒரு பகுதிதான் பகவத் கீதை. கீதையில் ஓர் அற்புதமான காட்சி. பாண்டவர் குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜூனனுக்கும், கிருஷ்ண பரமாத்வுக்கும் நிகழும் உரையாடல். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடக்கவிருக்கும் குருச்சேத்திரப் போரில் அர்ஜூனனின் தேரோட்டியாக வருகிறார் கிருஷ்ண பரமாத்மா. போர் ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. போர்க்களத்தில் இரு தரப்பினரும் தயார் நிலையில் இருக்கிறார்கள். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடக்கும் இந்தப் போர் நிலத்தைச் சம்பந்தப்பட்டது,  நாட்டைச் சம்பந்தப்பட்டது. பாண்டவர்கள் கவுரவர்களின் சூழ்ச்சியால் தங்கள் நாட்டைச் சூதாட்டத்தில் இழந்தார்கள்.

சூதாட்ட விதிப்படி, நாட்டை இழந்த பாண்டவர்கள் பதினான்கு ஆண்டு கால வனவாசம் மேற்கொள்வதோடு, அந்தப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் ஓர் ஆண்டு கவுரவர்களின் கண்களில் படாமல் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் யாவும் முறையே கடைப்பிடிக்கப்பட்ட போதிலும் தவணை முடிந்ததும் நாட்டைத் திரும்ப கொடுக்க மறுக்கின்றனர் கவுரவர்கள். அவர்களின் திமிர் மிகுந்த பேச்சில் ஊசி குத்த கூட நிலம் தர மாட்டோம் என்பதாகும். இதுதான் நடக்க போகும் போருக்குக் காரணம்.

போர் ஆரம்பிக்கும் முன் வீரன் அர்ஜூனன் போர்க்களத்தைப் பார்க்கிறான். எதிர்தரப்பில் எல்லாரும் அவன் உறவினர்கள். என் இரத்தத்தையா கொன்று குவிப்பது? வேண்டாம் என்ற நிலைக்கு உந்தப்படுகிறான் அர்ஜூனன். அவனின் தடுமாற்றத்தைக் கண்ணுற்ற கிருஷ்ண பரமாத்மா மனக்களக்கத்திற்கான காரணத்தைக் கேட்க, சொந்தங்களைக் கொன்று குவித்த பின் நாடு எதற்கு என்ற கேள்வியை எழுப்புகிறான் அர்ஜூனன். நாடுதானே வேண்டும்! எடுத்துக்கொண்டு போகட்டும். இரத்தம் சிந்த வேண்டிய அவசியமில்லை. அது முறைகேடானது.

கிருஷ்ண பரமாத்மா தந்த விளக்கம் அற்புதமானது. உனக்கும் உறவினர்க்கும் நடக்கும் இந்தப் போர் சாதாரண போர் அன்று. நியாயத்துக்கும், அநியாயத்துக்கும்; நீதிக்கும் அநீதிக்கும்; தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் போர். இது தனிப்பட்டவர்களுக்கு எதிரானது அல்ல. தனிப்பட்டவர்கள் தர்மத்தின் பக்கமும், அதர்மத்தின் பக்கமும் தேர்ந்தெடுத்து நிற்கிறார்கள். எனவே, இந்தப் போர் தனிநபர்களைப் பற்றியது அல்ல. இந்தப் போரில் மரணம் நேரலாம்.

கொல்லப்படுவது தனி மனிதர்கள் அல்ல. மரணமடைவது தவறான நிலை. வெற்றி பெறுவது உண்மை. எனவே, தவறான முறையில் நாட்டை அபகரித்து, பாண்டவர்கள் நாட்டைத் திரும்ப ஒப்படைக்காத போது அது அதர்மம். நாட்டைத் திரும்பப் பெறுவதே தர்மம். எனவே, இது தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நிகழும் போராகும். அதர்மத்தின் பக்கம் நின்று தர்மத்தை வெல்ல முடியும் என்ற எண்ணத்துக்குச் சாவு மணி அடிக்கும் செயல் இது.

மடிவது தனி மனிதர்கள் அல்ல. அவர்களின் திமிர் பிடித்த எண்ணம், அவர்களின் கொடுமையான மனநிலை, அவர்கள் பிரார்த்திக்கும் கயமைத்தனம், அதர்மம். அவ்வளவுதான்!

எவர் தவறான முறையில் நாட்டை, அதிகாரத்தைப் பறித்தார்களோ, அவர்களின் மனநிலையைத் திருத்த வேண்டும். அவர்களிடமிருந்து திருட பெற்ற அதிகாரம் திரும்பப் பெற்றாக வேண்டும். அதுவே தர்மத்தின் வெற்றி!