ஹிண்ட்ராப் பேரணி உருவாக்கமும், சாமிவேலுவின் சரிவும்

இராகவன் கருப்பையா- கடந்த 2007ஆம் வருஷம் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும்.

ஏனெனில் அவ்வாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்தது.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே இருந்த வேளையில், சிலாங்கூரின் கிளேங் மாவட்டத்தில் உள்ள பாடாங் ஜாவா பகுதியில் அமைந்திருந்த மாரியம்மன் ஆலயம் அரசாங்கத்தால் முரட்டுத்தனமாக இடித்துத் தள்ளப்பட்டதும், 4 வாரங்கள் கழித்து தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணியும் இன்றளவும் மறக்க இயலாத சரித்திரப்பூர்வ நிகழ்வுகளாகும்.

குறிப்பாக ம.இ.கா.வின் முன்னாள் தலைவர், மறைந்த சாமிவேலுவின் நெடுந்தூர அரசியல் பயணத்தை அவ்விரு சம்பவங்களும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தன என்பதில் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.

அதோடு மட்டுமின்றி, 3 புதிய இந்திய அரசியல் கட்சிகள் உருவாவதற்கும் நேரடியாகவே அவை வழி வகுத்தன.

கோயிலை உடைக்க வேண்டாம் என அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் கிர் தோயோவை தாம் கேட்டுக் கொண்டதாகவும் அவ்வேண்டுகோளுக்கு அவர் செவி சாய்க்கவில்லை என்றும் சாமிவேலு சாக்குப் போக்குக் கூறிய போதிலும் மக்கள் அதனை ஏற்கத் தயாராயில்லை.

சமுதாய நலனைப் பேணிக்காக்க வேண்டிய ஒரு தேசியத் தலைவர் இப்படிப் பொறுப்பற்ற வகையில் காரணம் காட்டி சமாளிக்கக் கூடாது என்பதே மக்களின் ஆதங்கமாக அப்போது இருந்தது.

அதே சூட்டில் ஹிண்ட்ராஃப் பேரணிக்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றதை உதாசினப்படுத்தியது சாமிவேலுவின் மற்றொரு தவறாகும். இந்நாட்டில் நம் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறுப் பிரச்சினைகளை முன் வைத்துத்தான் அப்பேரணி ஏற்பாடு செய்யப்படுகிறது என்பது அவருக்கும் நன்றாகவேத் தெரியும்.

சற்று சிரத்தையடுத்து ஏற்பாட்டாளர்களை அழைத்து பேசியிருந்தால் நிறையப் பிரச்சினைகளுக்கு அப்போது அவர் தீர்வு கண்டிருக்க முடியும்.

ஆனால் தனக்கே உரிய அகங்காரத்திற்கு அடிமைப்பட்டு அச்சமயத்தில் அவர் செயல்பட்டதால் அவருடைய அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாவதற்கு அவரே வழிவகுத்துக் கொண்டார்.

அப்பேரணியைத் தடுப்பதற்கு அரசாங்கம் செய்த அவ்வளவு முயற்சிகளும் சுக்கு நூறாகி, ஆயிரக் கணக்கான இந்திய இளைஞர்கள் தலைநகரில் குழுமியது வரலாறு.

சாமிவேலு மட்டுமின்றி அப்போதையப் பிரதமர் படாவியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அப்பேரணி சர்வதேச நிலையில் பேசப்பட்டது.

அப்பேரணிக்குத் தலைமையேற்ற வழக்கறிஞர்களான உதயகுமார், கணபதிராவ், மனோகரன், கங்காதரன் மற்றும் பொருளகத்துறையைச் சேர்ந்த வசந்தகுமார், ஆகியோர் கொடூரமான ஐ.எஸ்.எ. சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க படாவி செய்த முடிவு மக்களிடையே சாமிவேலுவின் புகழை மேலும் மங்கச் செய்தது. மற்றொரு தலைவரான உதயகுமாரின் இளைய சகோதரர் வேதமூர்த்தி கைது செய்யப்படுவதற்கு முன் லண்டன் சென்றுவிட்டார்.

சுமார் 4 மாதங்கள் கழித்து நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் சாமிவேலு உள்பட ம.இ.கா.வின் பல தலைவர்கள் படுதோல்வி அடைந்ததோடு வரலாற்றில் முதல் முறையாக பாரிசான் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது.

விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனப் பல மாதங்கள் கழித்து இதரத் தரப்பினரோடு சாமிவேலுவும் அறைகூவல் விடுத்த போதிலும் அவர் மீதும் ம.இ.கா. மீதுமான மக்களின் கோபம் தணியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

பிற்காலத்தில் கணபதிராவும் மணோகரனும் ஜ.செ.க. சார்பில் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவதற்கு அச்சம்பவங்கள் வழிவகுத்தன.

அது மட்டுமின்றி எச்.ஆர்.பி. எனும் மலேசிய மனித உரிமை கட்சியை உதயகுமார் தோற்றுவித்தார். ஆனால் ஏதோ காரணத்தினால் ஏறத்தாழ 3 ஆண்டுகள் கழித்து அது கலைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

எனினும் சிறிது காலம் கழித்து நாடு திரும்பிய வேதமூர்த்தி, எம்.எ.பி. எனும் மக்கள் முன்னேற்றக் கட்சியைத் தொடக்கினார்.

இதற்கிடையே ஹிண்ட்ராஃபின் சுலோகமான ‘மக்கள் சக்தி’ எனும் பெயரில் கட்சியொன்றைத் தோற்றுவித்த ஒரு முன்னாள் ஆசிரியரான தணேந்திரன் ஹிண்ட்ராஃபின் கொள்கையிலிருந்து பல்டியடித்து அரசாங்கம் மக்கம் சாய்ந்தார்.

சிதறிக்கிடக்கும் இந்தியர்களின் ஒற்றுமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அப்போதையப் பிரதமர் நஜிப் அக்கட்சியை அரவணைத்து ஆதரவளித்தார்.

எனவே தன்னை அசைக்க யாருமில்லை எனும் மமதையிலிருந்து வெளியாகி சமுதாயத்தின் தேவைகள் மீது சாமிவேலு அச்சமயத்தில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் முதற்கண் ஹிண்ட்ராஃப் எனும் ஒரு எழுச்சி இயக்கம் உருவாகியிருக்காது என்பதோடு, இப்படிப்பட்ட மாற்றங்களும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இவ்வளவுத் திருப்பங்கள் நிகழ்ந்தும் நம் சமுதாயம் இன்னமும் இனவாதத்திற்குப் பலியாகி, உதாசினப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்ட இரண்டாந்தார சமூகமாகவே அரசாங்கத்தால் நடத்தப்படுவது வேதனைக்குரிய ஒன்று.