திருமண விருந்தும் – தர்மசங்கடமும் – இராகவன் கருப்பையா

நம் குடும்பத்தில் ஒரு திருமண வைபவம் நடைபெறும் போது, அந்நிகழ்ச்சிக்கு நிறைய பேர் வர வேண்டும், ஆரவாரத்துடன் மகிழ்ச்சி ததும்ப அந்நிகழ்வு அமைய வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது இயல்பான ஒன்றுதான்.

முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள் ஆகிய எல்லாருடைய இல்லங்களையும் அதிகச் சிரத்தை எடுத்துத் தேடிச் சென்று அழைப்பிதழ்களை நேரடியாகக் கொடுத்துவிட்டு வருவது மரபு. அதிலும் நெருங்கிய தொடர்புடைய, அல்லது முக்கியமானவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு அவ்வழைப்பிதழை ஒரு தட்டில் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.

தகுந்த மரியாதை

தற்போதைய நவீன காலத்தில் நேரடியாகச் சென்று அழைப்பிதழைக் கொடுப்பது குறைந்து, பெரும்பாலான வேளைகளில் புலனம் வழியாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ அது அனுப்பப்படுகிறது.

எனினும் குறிப்பிட்ட சிலருக்கு நேரடியாகச் சென்று தட்டில் வைத்துக் கொடுப்பது கட்டாயம் என்று கருதப்படுவதால் அவ்வழக்கத்தில் இன்னமும் மாற்றமில்லை.

ஆனால் இப்படிச் சகலச் சம்பிரதாயங்களோடும் பண்போடும் அழைக்கப்படும் விருந்தினர்கள் திருமண வைபவத்தின் போது தகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா என்பதுதான் கேள்விக்குறி.

உண்மையிலேயே பார்க்கப் போனால் ஒரு திருமண வைபவத்தில், அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்கள்தான் அதி முக்கியமான அங்கம் வகிக்கின்றனர்.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் உணவுக்காக அவர்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

அதே வேளையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்த திருமண வீட்டார் வி.ஐ.பி.களைப் போல எங்கும் நகராமல் அமர்ந்த இடத்திலேயே சொகுசாக அமர்ந்து உணவு அருந்துவதற்கு ஏற்பாடு செய்து கொள்கின்றனர்.

நீண்ட நேரம் வரிசையில் நிற்பது

சில திருமண வைபவங்களில் இவர்கள் உணவருந்தி முடிந்த நிலையிலும் கூட, அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இன்னமும் தட்டுகளை ஏந்திக் கொண்டு பரிதாபகரமாக வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிகிறது. பல சமயங்களில் சுமார் 20 நிமிடங்கள் கூட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

உணர்ந்தோ உணராமலோ நிகழும் இத்தகைய தவறு, விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற இந்தியர்களின் பாரம்பரியத்திற்குக் கொஞ்சமும் ஒவ்வாத ஒரு அவலமாகும்.

முன்பெல்லாம் விருந்தினர்களை வரிசையாக அமரச் சொல்லி வாழை இலையில் உணவு பரிமாறுவது வழக்கத்தில் இருந்த மரியாதைக்குரிய ஒரு அம்சமாக இருந்தது. எனினும் தற்போதைய நவீன யுகத்தில் அத்தகைய வழக்கம் கிட்டத்தட்டச் சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது.

தற்போதைய சூழலில் விருந்தினர்கள் அனைவருக்கும் அமர்ந்திருக்கும் இடத்திலேயே உணவு பரிமாற ஏற்பாடு செய்வது திருமண வீட்டாரின் செலவுகளைச் சற்று அதிகரிக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

இருந்த போதிலும் விருந்தினர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்ப்பதற்கு 3 அல்லது 4 இடங்களில் தனித்தனியாக உணவு பரிமாறுவதற்கு ஏற்பாடு செய்யலாம். பல வேளைகளில் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தப்படுவதில்லை.

மற்றொரு கேவலமான விஷயம், ஆட்டு இறைச்சியை மட்டும் விருந்தினர்களைத் தொடவிடமாட்டார்கள். அவ்விடத்தில் நிற்கும் ஒருவர் சிறிய கரண்டியைக் கொண்டு ‘ரேஷன்’ போல அதனைப் பரிமாறுவார். இச்செயல், விருந்தினர்களை அவமானப்படுத்தும் மிக மோசமானதொரு அறிவிலித்தனம் என்றால் அது மிகையில்லை.

ஒரு வேளை ஆட்டு இறைச்சியைச் சிலர் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது போலும். அதுதான் காரணம் என்றால் எத்தனைப் பேர்தான் அவ்வாறு சாப்பிடுவார்கள்? சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா!

ஆடல் பாடல்களுக்கான ஒலி

ஒருவகையாக உணவருந்தி விட்டு நீண்டநாள் சந்தித்திராத உறவினர்களுடனோ நண்பர்களுடனோ அளவளாவ எண்ணுவோருக்கு மற்றொரு சோதனை காத்திருக்கும்.

ஏதோ காரணத்தினால் திருமண வீட்டார் ஆடல் பாடல்களுக்கான ஒலியை இரவு விடுதியைப் போல உச்சத்திற்கு உயர்த்திப் பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் கூடப் பேச முடியாமல் செய்துவிடுகின்றனர்.

காதைக் கிழிக்கும் அளவுக்கு ஒலி உயர்ந்திருந்தால்தான் திருமண வைபவம் சிறப்பாக இருக்கிறது என்று பொருள்படும் என அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. விருந்தினர்கள் எப்படி அவதிப்படுகிறார்கள் என்று அவர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.

பண்போடு அவர்களை நாம் உபசரிப்பது

பல தருணங்களில் விருந்தினர்கள் வெறும் கை சைகையில் மட்டுமே பேசிவிட்டுச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நொந்து போய் வீடு திரும்புகின்றனர்.

ஆக நம் வீட்டுத் திருமணத்திற்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுத்து நமது உறவினர்களையும் நண்பர்களையும் நாம் அழைக்கிறோமோ அதே போல வைபவத்தின் போது பண்போடு அவர்களை நாம் உபசரிப்பது அவசியமாகும். அவர்களை அலைக்கழித்து நம்மை அறியாமலேயே அவமானப்படுத்தி மனக் கசப்புடன் வீட்டுக்கு அனுப்பக் கூடாது.