கொழும்பில் திடீர் இராணுவ முகாம்கள்

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் இராணுவ முகாம்களை அமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி சிறிலங்கா அதிபரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொதுஜன பெரமுனவின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

சட்டவிரோதமான செயற்பாடு

இதன்போது கருத்து வெளியிட்ட ஜீ.எல்.பீரிஸ், “அரச ரகசியங்கள் சட்டத்தின் படி பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் இச்சட்டம் 67 வருடங்கள் பழமையானது. இது சட்டவிரோதமான செயற்பாடு.

அமைச்சரவை இரகசியங்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கே இச்சட்டம் உள்ளது. இதனூடாக பாதுகாப்பு வலயங்களை அமைக்க முடியாது.

உயர் பாதுகாப்பு வலயங்களில் ஐஸ் விற்பனை செய்பவருக்குக் கூட பிரச்சினைகள் வரலாம். காலி முகத்திடலில் சென்று இனி பட்டாசுகளைக்கூட கொளுத்த முடியாது.

இதுபோன்ற நாடொன்றுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்களா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கருத்துரைக்கையில், “போராட்டங்களை மேற்கொள்ள காவல்துறையினரின் அனுமதியைப் பெற வேண்டுமா? இல்லையா என்பதை பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவரது அப்பா அல்லது தாத்தாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஓடியொழிய வேண்டிய நிலை

எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்தால் இறுதியில் பைத்தியமாகி விடுவீர்கள். நீதிமன்றங்களுக்கு கல்லெறியும் காலம் விரைவில் வரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எங்களது மாகாணத்தில் அமைச்சர்களை தலைக்கவசத்தைக் கொண்டு மக்கள் தாக்குகிறார்கள்.

எனவே, அரசாங்கத்தினர் இறுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களிலேயே ஓடியொழிய வேண்டிய நிலை ஏற்படும். அதிபர் ரணில் விக்ரமசிங்கவை யாரோ இயக்குகிறார்கள்” என்றார்.

 

-ibc