திக்கற்ற நிலையில் தடுமாறும் அரசியல் தவளைகள் கட்சி

இராகவன் கருப்பையா – கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் முழு நம்பிக்கையோடு வாக்களித்த தொகுதி மக்களுக்கு துரோகமிழைத்து சுயநல வேட்கையில் கட்சி மாறிய அரசியல் தவளைகள் இப்போது திக்கற்றுத் தவிக்கின்றனர்.

‘பார்ட்டி பங்சா மலேசியா'(பி.பி.எம்.) எனும் ஒரு புதுக் கட்சியில் இணைந்த அவர்கள் தற்போது நிலைகுலைந்து தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பதைப் போல் தெரிகிறது.

ஏனெனில் தோற்றுவிக்கப்பட்டு இன்னும் ஓராண்டுக் கூட நிறைவு பெறாத நிலையில் உள்ள அக்கட்சி தலைமைத்துவப் போராட்டத்தில் இப்போது பிளவுபட்டுக் கிடக்கிறது.

பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர்களான சேவியர் ஜெயகுமார் மற்றும் சந்தரகுமார் உள்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் சேவியர் கண்ணியமாக அரசியலில் இருந்து விலகி நிற்பதாக அறிவித்துள்ளார்.

அதே சமயம், பேராக் மாநில புந்தோங் தொகுதியைச் சேர்ந்த ஜ.செ.க.வின் சிவசுப்ரமணியம் உள்பட 6 சட்டமன்ற உறுப்பினர்களும் பி.பி.எம்.மில் உள்ளனர்.

கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் பி.கே.ஆர். கட்சியில் இருந்து விலகிய சரவாக், ஜுலாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி சங் சில மாதங்கள் கழித்து பி.பி.எம். கட்சியை நிறுவினார்.

கூச்சிங்கில் தலைமையகத்தைக் கொண்ட அக்கட்சிக்கு அம்பாங் தொகுதியின் ஸுராடா கமாருடின் தலைவராகவும் லேரி சங் துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பக்காத்தான் ஆட்சியைக் கவிழ்த்தக் கும்பலில் முக்கியப் பங்காற்றிய அரசியல் தவளைகளில் ஸுராய்டாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.கே.ஆர். கட்சியிலிருந்து பெர்சத்து கட்சிக்குத் தாவிய அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்த போதிலும் பிறகு அங்கிருந்துத் தாவி பி.பி.எம்.மில் சேர்ந்தார்.

அவருடையத் தலைமையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சியடைந்த பி.பி.எம்., சுயேட்சைகளாக திக்கற்ற நிலையில் வெளியே திரிந்த ஏராளமான அரசியல் தவளைகளை ஈர்த்தது.

பாரிசான் கூட்டணியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்த அக்கட்சி நாட்டின் அரசியல் வட்டாரத்தில் அதிகமாகப் பேசப்பட்டு பலருடைய கவனத்தையும் ஈர்த்து புகழின் உச்சிக்குச் சென்றது.

எதிர்வரும் போதுத் தேர்தலில் யார் எங்கு போட்டியிடுவார் எனும் திட்டத்தைக் கூட அவர்கள் வரையத் தொடங்கிவிட்டனர்.

பாரிசானில் இணைவதற்கு அக்கூட்டணியில் இருந்து சாதகமான அறிகுறிகள் தென்படுவதாகவும் விரைவில் அது சாத்தியமாகும் என்றும் ஸுராய்டா உற்சாகமாக அறிக்கை வெளியிட்டார்.

ஆனால் பாரிசான் அந்தத் தவளைகள் கட்சியைப் பொருட்படுத்தியதாகவேத் தெரியவில்லை. அக்கூட்டணியின் தலைமைத்துவம் இதுநாள் வரையில் மௌனமாகவே உள்ளது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன், ‘யார் சொன்னது ஸுராய்டா தலைவர் என்று? நான்தான் பி.பி.எம். கட்சியின் அதிகாரத்துவத் தலைவர் என்று தீடீரென ஒரு அறிவிப்பை செய்தார் லேரி சங்.

அந்த அதிர்ச்சியில் இருந்து உறுப்பினர்கள் மீள்வதற்குள் ஸுராய்டா மீதும் உச்சமன்ற உறுப்பினர்கள் பலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு நேற்று அவர்களை இடை நீக்கம் செய்தார்.

ஏற்கெனவே தனக்குத் தெரியாமல் உச்சமன்றக் கூட்டத்தைக் கூட்டியதற்காக கட்சியின் தலைமைச் செயலாளரையும் தகவல் பிரிவுத் தலைவரையும் லேரி சங் கடந்த வாரம் இடை நீக்கம் செய்துவிட்டார்.

இன்னும் சில தினங்களில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படவிருக்கும் தறுவாயில் கட்சியின் நிலைப்பாடு ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், தங்களுக்குத் தோல் கொடுத்த கட்சிக்கும் தூக்கிவிட்ட வாக்காளர்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து, தற்காலிக சுக போகங்களுக்கு அடிமையாகிய ஸுராய்டா மட்டுமின்றி,  சந்தரகுமார் மற்றும் சிவசுப்ரமணியம் போன்றோரின் அரசியல் வாழ்வு இதோடு ஒரு முடிவுக்கு வந்தாலும் அதில்  வியப்பில்லை.