அரசியல் அறிமுகம்: துளசி மனோகரன்

இராகவன் கருப்பையா –அரசியல்வாதியாகும் துடிப்பும் பொறுப்புணர்வும் கொண்ட இளம் வழக்கறிஞர் துளசி திவானி மனோகரன், அதை ஓர் அத்தியாவசிய மனித உரிமை உணர்வின் வெளிப்பாடாகும் என்கிறார்.

பேராக் மாநிலத்தின் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜ.செ.க.வைப் பிரதிநிதித்துக் களமிறங்கும் துளசி, தெலுக் இந்தான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனின் மூத்த புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கான்வெண்ட் புக்கிட் நெனாஸ் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்த அவர் மலாயா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து ஒரு வழக்கறிஞரானார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேல் வழக்கறிஞர் தொழில் புரிந்த துளசி பிறகு 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் அரசாங்கத்தில் கல்வித்துறை துணையமைச்சராக இருந்த தியோ நீ சிங்கின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இயல்பாகவே சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொண்டுள்ள அவர் அந்தக் காலக் கட்டத்தில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளுடன் அணுக்கமாகச் செயலாற்றியுள்ளார்.

தமிழ் பள்ளிக்கூடம் சென்றதில்லை எனும் போதிலும் சுயமாகத் தமிழ் கற்றுச் சரளமாகப் படிக்கும் அளவுக்குத் தனது மொழி வளத்தை அவர் செம்மைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாகப் பஹாங், சிலாங்கூர மற்றும் பேராக் ஆகிய 3 மாநிலங்களிலும் ஜ.செ.க.வின் சார்பில் என்னவற்ற நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று அளப்பரிய சேவையாற்றிறுள்ளார் துளசி.

எந்நேரத்திலும் களமிறங்கிச் சுறுசுறுப்பாக இயங்கும் அவருடைய ஆற்றலைக் கண்ணுற்ற ஜ.செ.க. தலைமைத்துவம் தம்புன் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தது.

கடந்த பொதுத் தேர்தலில் ஜ.செ.க. சார்பில் அத்தொகுதியில் வெற்றி பெற்ற சிவசுப்ரமணியம் அரசியல் தவளையாகப் பெர்சத்து கட்சிக்குத் தாவி பிறகு அங்கிருந்து பி.பி.எம். கட்சிக்குத் தாவினார்.

சுமார் 22 மாதங்கள் கல்வி அமைச்சில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, பேராக் மாநிலத்தில் உள்ள பிள்ளைகளின் உயர் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்குப் பாடுபடப் போவதாகக் கூறும் துளசி சட்டத்துறை தொடர்பான உதவிகளையும் செய்து வருகிறார்.

ஏறத்தாழக் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஈப்போவில் உள்ள பல தலைசிறந்த வழக்கறிஞர்களின் ஆதரவோடு இலவசச் சட்டத்துறை சேவைகளை வழங்குவதற்கு மொத்தம் 4 முகாம்களை அவர் நிறுவினார்.

அந்த முகாம்களின் வழி 70கும் மேற்பட்டோரின் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறும் துளசி, அடிதட்டு மக்களின் உற்ற தோழி என்பதை இத்தகைய சேவைகளின் வழி நிரூபித்துள்ளார்.

‘பிறப்புப் பத்திரங்கள் இல்லாமல் நிறையப் பேர் அவதிப்படுவது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அப்பிரச்சினைக்கும் நான் முன்னுரிமை வழங்குவேன்’ என்றார் அவர்.

எண்ணற்ற பிள்ளைகள் அப்பத்திரங்களை முறையாகப் பெறுவதற்கு ஏற்கெனவே வகை செய்துள்ள அவர், பல நிலைகளில் மலிந்து கிடக்கும் இனத்துவேசத்தைக் கலைவதற்கும் பாடுபடப் போவதாகச் சூளுரைத்தார்.

திருமணத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கு இப்போதைக்கு நேரமில்லை என்று கூறும் 33 வயதுடைய இந்தச் சிங்கப் பெண் அரசியலில் சிறப்பானதொரு தடத்தைப் பதிப்பார் என்பதில் ஐயமில்லை.